இந்தியர்களுக்கு எதிரான ஆன்லைன் பதிவுகளுக்குத் தடை... சிங்கப்பூரில் அதிரடி உத்தரவு!
சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களுக்கு எதிராகப் பதிவிடப்பட்டிருந்த ஆன்லைன் பதிவுகளைத் தடை செய்து அதிரடி உத்தரவை சிங்கப்பூர் அரசு பிறப்பித்துள்ளது.
இந்தியர்கள் தற்போது சிங்கப்பூரை ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் அந்நாட்டின் கலாச்சாரம் ஆபத்தில் உள்ளதாகவும் பதிவிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் அதிகரித்து வரும் இந்திய வம்சாவளித் தலைவர்கள் இந்தியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்தப் பதிவுகள் சிங்கப்பூரின் பல்கலாச்சாரக் கொள்கைகளைச் சீர்குலைக்கும் வகையிலும், இந்தியர்களின் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் இருந்தன. இவை சீனாவிலிருந்து திட்டமிட்டு பரப்பப்பட்டவை என்று சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் குற்றவியல் தீங்குகள் சட்டம் 2023 இன்படி, சிங்கப்பூரில் எவரும் இந்தப் பதிவுகளைப் பார்க்க முடியாதபடி உடனடியாக முடக்கப்பட்டுள்ளது.
இதைப்போல சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையைக் கெடுக்கும் வகையிலான செயல்பாடுகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
