எச் -1பி விசா முறையை அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென மாற்றியமைத்த நிலையில், அதற்கு பதிலடியாக, திறன்மிகு இந்தியர்களை தங்கள் நாட்டில் பணிபுரிய வருமாறு ஜெர்மன் நாட்டு தூதர் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் பலநாடுகளுக்கு சென்று இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வரிசையில் இந்தியர்களின் கனவு தேசமாக என்றும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா.
ஆனால் தனது எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன்படி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் மீது 50 சதவீத இறக்குமதி வரி விதித்தார். இது கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டவர் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான வழங்கப்படுகிற எச்-1பி விசா கட்டணம் ரூ.1.40 லட்சத்தில் இருந்து ரூ.88.09 லட்சமாக உயர்த்தினார். இதனால் அமெரிக்கா செல்ல காத்திருந்த இந்தியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப் அக்கர்மன் திறமையான இந்தியர்களை தங்கள் நாட்டில் பணிபுரிய அழைத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‛‛ஜெர்மனி தனது புலம்பெயர் கொள்கை, ஐடி, மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் தனித்து நிற்கிறது. ஜெர்மனியில் பணிபுரியும் இந்தியர், ஜெர்மானியரின் சராசரி வருமானத்தை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். ஏனென்றால் இந்தியர்கள் ஜெர்மனிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இதனால் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.அதுமட்டுமின்றி நாங்கள் கடின உழைப்பு, சிறந்த மக்களுக்கு சிறப்பான வேலைகளை வழங்குவதில் நல்ல நம்பிக்கை வைத்துள்ளோம். இது மிகவும் திறமையான அனைத்து இந்தியர்களுக்குமான எனது அழைப்பாகும்.'' என அழைப்பு விடுத்துள்ளார்.