கண்ணீரில் துளிர்விட்ட காட்டுச் செடி!

sprouted seed grown in the human eye
மனிதனின் கண்ணுக்குள் முளைத்த செடி
Published on: 

மண்ணில் வேரூன்றி வளர வேண்டிய செடி, ரஷியாவில் ஒரு இளைஞரின் கண்ணில் வளர்ந்துள்ளது.

ரஷியாவின் யகுடியா மாகாணத்தைச் சேர்ந்த 42 வயதான இளைஞர் மாக்சிம் ஸ்லெப்ட்சோவ். இவருக்கு கடந்த சில மாதங்களாக கண்ணில் வலி, எரிச்சல், தலைவலி ஏற்பட்டு இருந்தது. இதனால், அண்மையில் இவர் மருத்துவரை அணுகினார். அப்போது, அவருடைய கண்ணின் தசைப்பகுதியில் ஒரு செடி துளிர்விட்டு 3 மில்லிமீட்டர் அளவிற்கு வளர்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அந்தச் செடியை ஊசியின் மூலமாக மருத்துவர் அகற்றினார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், செடியை அகற்றியவுடன் அவருக்கு தலைவலி உடனே விலகிவிட்டது.

இந்த செடி எப்படி வளர்ந்தது என்று கேட்டபோது, சில மாதங்களுக்கு முன்னர் கோடைக்கால விடுமுறைக்காக வனப்பகுதிக்கு இவர் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, ஒரு செடியின் கிளை இவர் கண்ணில் கீறியதாகக் கூறினார். பின்னர், கண்ணில் சிக்கியிருந்த குச்சியை உடனடியாக அகற்றியதாகவும் கூறினார்.

இருப்பினும், அந்தச் செடியின் விதை எப்படியோ அவருடைய கண்ணுக்குள் நுழைந்துவிட்டது. அந்த விதை நாளடைவில் துளிர்விட்டு செடியாக மாறியுள்ளது.

இந்தச் செடியை அகற்றிய மருத்துவர், இதற்கு முன்னர் இப்படியொரு வித்தியாசமான சம்பவத்தைப் பார்த்ததே இல்லை என்று தெரிவித்தார்.

கண்ணீரைத் தண்ணீராக பயன்படுத்தி வளரலாம் என்று அந்தச் செடி முடிவு எடுத்துவிட்டது போலும்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram