அச்சிந்தியா சிவலிங்கம்
அச்சிந்தியா சிவலிங்கம்

தமிழ்நாட்டு வம்சாவளி மாணவி அமெரிக்காவில் கைது!

தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மாணவி, பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அச்சிந்தியா சிவலிங்கம், கோயம்புத்தூரில் பிறந்து கொலம்பசில் வளர்ந்தவர். அங்குள்ள சர்வதேச மேம்பாட்டுக்கான பொது விவகாரங்கள் துறையில் முதுநிலைப் பட்டம் படித்துவரும் இவர், சக மாணவர்களுடன் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார். அதன்படி, வியாழனன்றும் மாணவர்கள் அவரவர் வளாகங்களில் குடில் அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்திவந்தனர். 

இதனால் கடுப்பான நிர்வாகம், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதையும் மீறி நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அச்சிந்தியாவையும் அதே துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவரும் ஹசன் சையத் என்பவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். 

கைது நடவடிக்கையை அடுத்து எச்சரிக்கையால் குடிலை மாணவர்களே கலைத்தனர். ஆனால் அதே இடத்தில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர். முதலில் 110 பேரே பங்கேற்ற அந்தப் போராட்டத்தில் பிற்பகலில் 300 பேர் இடம்பெற்றனர் என்று பிரின்ஸ்டன் பல்கலை. முன்னாள் மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. 

கைதுசெய்யப்பட்ட இரு மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளதாக அதன் பேச்சாளர்களில் ஒருவரான ஜெனிஃபர் மோரில் தெரிவித்தார். 

கடந்த வாரம் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் 100 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அமெரிக்கா முழுவதும் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆர்வர்டு,  யேல் பல்கலைக்கழகங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com