வங்கதேசத்தின் பிரதமராக பதவியேற்றார் தாரிக் ரகுமான்!

வங்கதேச பிரதமராக பதவியேற்றுக் கொண்ட தாரிக் ரகுமான்
வங்கதேச பிரதமராக பதவியேற்றுக் கொண்ட தாரிக் ரகுமான்
Published on

வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரகுமான் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், மொத்தமுள்ள 297 இடங்களில் 209இல் இடங்களில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வங்கதேச தேசியவாத கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக தாரிக் ரகுமான் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, தாரிக் ரஹ்மான் தலைமையிலான 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள் கொண்ட அமைச்சரவைக் குழு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றக் கட்டடமான ஜதிய சங்கசத் பவனில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் அதிபர் முகமது சகாபுதீன் தாரிக் ரஹ்மானுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும், தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா சார்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா மற்றும் பிஎன்பி கட்சியின் கலீதா ஜியா ஆகியோர் மட்டுமே பிரதமராகப் பதவி வகித்து வந்த நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வங்கதேசத்துக்கு ஆண் ஒருவர் பிரதமராகப் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com