மரணப் படுக்கையில் தாயை பார்க்க விடாமல் தடுத்த ஹசீனா! – தஸ்லிமா நஸ்ரின்
‘ மரணப் படுக்கையில் இருந்த என் தாயை பார்க்க விடாமல் தடுத்தவர்தான் இந்த ஷேக் ஹசீனா’ என பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விமர்சித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிய ஷேக் ஹசீனா மீது சீறி இருக்கிறார் பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“1999 ஆம் ஆண்டு மரணப் படுக்கையிலிருந்த என்னுடைய தாயாரைப் பார்க்க வங்கதேசத்துக்குச் சென்றபோது, என்னை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை ஷேக் ஹசீனா. இஸ்லாமிய அடிப்படைவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக அதைச் செய்தார். ஆனால், இன்று ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்திய மாணவர் இயக்கத்தின் பின்னணியில் அதே இஸ்லாமிய அடிப்படைவாதிகளே உள்ளனர்.
ஹசீனா நாட்டை வெளியேறுவதற்கு அவரேதான் காரணம். இஸ்லாமிய அடிப்படைவாதிகளை வளரச்செய்தவர். ஊழலை அனுமதித்தவர். வங்கதேசம் பாகிஸ்தானைப் போல் ஆகிவிடக் கூடாது. ராணுவ ஆட்சி கூடாது.அரசியல் கட்சியினர் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் கொண்டு வர வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
வங்கதேசத்தை சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின் லஜ்ஜா என்ற நாவல் எழுதியதற்காக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், அவர் 1994ஆம் ஆண்டு வங்கதேசத்தை விட்டு வெளியேறினார். அதிலிருந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வருகிறார்.