ஆர்வமாக மொபைல் போன் பார்க்கும் மாணவர்கள்
ஆர்வமாக மொபைல் போன் பார்க்கும் மாணவர்கள்

பள்ளிகளில் இதைத் தடை செய்யுங்க! -யுனெஸ்கோ எச்சரிக்கை

பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க தடைசெய்ய வேண்டும் என யுனெஸ்கோ வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்ட யுனெஸ்கோ, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கை (Global Education Monitoring Report 2023) வெளியிடப்பட்டது.

‘Technology in Education: A Tool on Whose Terms’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், பள்ளிகளில் ஸ்மார்ட் போன்களுக்கு உலகளாவிய அளவில் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு கல்வி கற்றலை மேம்படுத்தவில்லை. மாறாக மாணவர்களின் நல்வாழ்வை மோசமாக்குகிறது. ஸ்மார்ட் போன் மாணவர்களை திசை திருப்புகின்றது.

குறிப்பாக 2 முதல்17 வயதுடைய மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அதிக நேரம் திரையிலேயே செலவிடுவது அவர்களின் நல்வாழ்வைக் குறைக்கிறது. குறைவான ஆர்வம், நிலையில்லாத உணர்ச்சி, அதிக கவலை, மனச்சோர்வை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டது.

பள்ளிகளில் மொபைல் போன்கள் தடை செய்யப்படுவது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும். குறிப்பாக குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம், ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மனிதர்கள் மீது ஆளுமை செலுத்தக்கூடாது. இதில் மானுடர்களை மையப்படுத்திய பார்வை வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் தகவல் கசியும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 16 சதவீத நாடுகள் மட்டுமே வகுப்பறையில், தகவல் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. ஏராளமான தகவல்கள் முறையான வழிமுறைகள் இல்லாமல் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். இதனால் மாணவர்களின் தகவல்கள் கல்வி தவிர்த்த பிற காரணங்களுக்காகவும், பொழுதுபோக்கு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை உரிமை மீறலாகும். இது சரிசெய்யப்பட வேண்டும்.

ஆன்லைன் கற்றலால் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததுதான். கொரோனா காலத்தில், ஆன்லைன் மட்டுமே கொண்ட கற்பித்தல் முறையால், சுமார் 50 கோடி மாணவர்கள் கற்றலைக் கைவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், உலக நாடுகள் தொழில்நுட்பத்தை கல்வியில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தாங்களாகவே விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மனிதர்களுக்குப் பதில் கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்களை முதன்மைப்படுத்திய கற்றலாக இருக்க வேண்டும் என யுனெஸ்கோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com