
சீன பொருட்களுக்கான வரியை 57% இல் இருந்து 47% ஆக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா சீனா இடைய கடந்த சில மாதங்களாகவே வர்த்தக போர் நீடித்து வருகிறது. இது அந்த இரு நாடுகள் மட்டுமின்றி, உலகெங்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான இன்று தென்கொரியாவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென் கொரியாவில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இரு தலைவர்களும் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினர். சுங்க வரிகளில் 10% குறைப்பு, சோயாபீன்ஸ் கொள்முதல் மீண்டும் தொடங்குதல் மற்றும் ரேர் எர்த் மெட்டல் என சர்ச்சை இருந்த எல்லாத் துறைகளிலும் குறிப்பிட தகுந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ”சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. நாங்கள் எப்போதும் சிறந்த உறவை கொண்டுள்ளோம். ஒருவரையொருவர் நாங்கள் நன்கு அறிவோம். ஜி ஜின்பிங் ஒரு சிறந்த தலைவர். மேலும் நீண்ட காலத்திற்கு நாங்கள் ஒரு அற்புதமான உறவைக் கொண்டிருக்கப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன்.
சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைக்கப்படும். சீனாவுடன் மேலும் பேச்சுவார்த்தைகளுக்காக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீன செல்கிறேன். அதன்பின் சீன அதிபரும் அமெரிக்கா வருகிறார். சீனாவுக்கு கணினி சிப்ஸ்களை ஏற்றுமதி செய்வது குறித்து இன்று ஆலோசித்தோம். விரைவில் வர்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். இனி பெரிய தடைகள் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சீன அதிபர் ஜின்பிங் கூறியதாவது: “சீனா மீதான வரி, 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். சீனா உடனடியாக அமெரிக்காவிலிருந்து சோயாபீன்ஸ் வாங்கத் தொடங்கும். மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த அரிய வகை மண் ஏற்றுமதி பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. இனி சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு மண் ஏற்றுமதியில் எந்தத் தடைகளும் இருக்காது” என்று தெரிவித்தார்.