‘நண்பேண்டா...’- டிரம்பின் இன்னொரு முகம்! அந்த பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துட்டாரே...!

டிரம்ப்
டிரம்ப்
Published on

‘நன்றி நண்பரே...’ என டிரம்பின் பிறந்தநாள் வாழ்த்துக்கு ரிப்ளை செய்தார் பிரதமர் மோடி.

‘நாங்கள் இருவரும் இயல்பான நண்பர்கள்’ என மோடியும் டொனால்டு டிரம்பும் கூறிவந்தாலும், அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு கசப்பையே பரிசளிக்கின்றன.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களுக்கு கை விலங்கிட்ட விவகாரம், இந்தியா – பாகிஸ்தான் போர் குறித்த டிரம்பின் பேச்சு, இந்தியா மீதான 50 சதவீத வரி விதிப்பு போன்றவை இந்திய அரசியலில் அதிர்வை கிளப்பிய விவகாரங்கள் ஆகும்.

தற்போது, போதைப்பொருள் அதிகம் கடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளார் டிரம்ப்.

கடந்த திங்கள் கிழமை (செப் - 15) நாடாளுமன்றத்தில் டிரம்ப் தாக்கல் செய்த அறிக்கையில், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார்.

அதில், “சட்டவிரோத ஃபெண்டானில் ரசாயனத்தின் உற்பத்தியில் சீனா முன்னோடியாக இருக்கிறது. மேலும், செயற்கை போதைப்பொருள்களான நைடசீன்கள் மற்றும் மெத்தம்பெட்டமைன் போன்றவை மூலம் உலகளாவிய போதைப்பொருள் பரவலை தூண்டும் முக்கிய விநியோகஸ்தராகவும் சீனா உள்ளது.

இந்த சட்டவிரோத ரசாயன உற்பத்தியை குறைத்து, குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள சீனாவை அமெரிக்கா வலியுறுத்துகிறது.

மேலும், போதைப்பொருள் வர்த்தகத்தில் தலிபான்களில் சிலர் தொடர்ந்து லாபம் ஈட்டுகின்றனர். இதனால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவதில் ஆப்கானிஸ்தான் தவறிவிட்டது.

சட்டவிரோத போதைப்பொருள்கள் கடத்தலால் அமெரிக்காவில் அவசர நிலை உருவாகியுள்ளது. இதில், 18 முதல் 44 வயதுடைய அமெரிக்கர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் பொது சுகாதார நெருக்கடியும் அடங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் 23 நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்துள்ளார்.

அந்த 23 நாடுகள் எது?

இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதில், ஆப்கானிஸ்தான், பொலிவியா, பர்மா, கொலம்பியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் தவறிவிட்டதாக குறிப்பிட்ட டிரம்ப், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com