அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் மத்திய புலனாய்வு பிரிவின் (எஃப்பிஐ) இயக்குநராக காஷ் பட்டேலை பரிந்துரைத்துள்ளார். இவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்.
இதுகுறித்து தனது சமூக ஊடகத்தில் தளத்தில் கூறியிருப்பதாவது, “மத்திய புலனாய்வு பிரிவின் அடுத்த இயக்குநராக காஷ் பட்டேல் பணியாற்றுவார் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர். துப்பறிவாளர். ஊழலை அம்பலப்படுத்தவும் நீதியை பாதுகாக்கவும் மற்றும் அமெரிக்க மக்களைப் பாதுகாக்கவும் தனது வாழ்நாளை செலவிட்ட அமெரிக்காவின் முதன்மை போராளி.
எனது முதல் பதவி காலத்தில் காஷ் மிகப்பெரிய பணியினைச் செய்தார். அப்போது அவர், பாதுகாப்பு துறையின் தலைமை தளபதியாகவும், தேசிய உளவுத்துறையின் துணை இயக்குநராகவும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்புக்கான மூத்த இயக்குநராகவும் பணியாற்றினார்.
எஃப்பிஐக்கு நம்பகத்தன்மை, தைரியம் மற்றும் ஒருமைப்பாட்டை மீண்டும் கொண்டுவர எங்களின் சிறந்த அட்டர்னி ஜெனரல் பாம் பாண்ட்டின் கீழ் காஷ் பணியாற்றுவார்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி அமெரிக்கரான காஷ் பட்டேல் நியூயார்க்கில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த குஜராத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள்.
நியூயார்க்கில் பள்ளிப்படிப்பையும் ரிச்மண்டில் கல்லூரிப் படிப்பையும் நியூயார்க் சட்டப்பள்ளியில் சட்டப்படிப்பினையும் காஷ் முடித்துள்ளார். பின்பு ஃபிளோரிடா வந்த அவர், மாநில வழக்கறிஞராகவும் மத்திய பொது வழக்கறிஞராகவும் தலா 4 ஆண்டுகள் பணியாற்றினார்.
ஃபிளோரிடாவில் இருந்து வாஷிங்டனுக்குச் சென்ற காஷ் நீதித்துறையில் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞராக பணியாற்றினார். மூன்றரை ஆண்டுகள் அவர் இந்தப் பணியில் இருந்தார்.