
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படாது என்று டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை அமெரிக்கா பாதுகாப்பதாகவும், அந்தச் சேவைக்காக 20% கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் நேற்று டிரம்ப் அறிவித்தார்.
ஆனால், ஒரு நாள் முடிவதற்குள்ளாகவே அந்த அறிவிப்பைத் திரும்பப்பெறுவதாகவும், அதற்கு பதிலாக வளைகுடா நாடுகளுடன் முதலீட்டு, வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும், ஈரான் தொடர்புடைய கப்பல்கள் மீது கட்டுப்பாடுகள் தொடரும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய எண்ணெய், எரிவாயுவை தொடர்ந்து வாங்கும் நாடுகளுக்கு 100%வரை சுங்கவரி விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
முதலில் 500% வரை சுங்கவரி விதிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதனை 100% வரை குறைத்து தேவைக்கேற்ப கட்டணத்தை நிர்ணயிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் ரஷ்ய எண்ணெய்யின் முக்கிய இறக்குமதியாளர்களான இந்தியா, சீனா உட்பட்ட நாடுகள் பாதிக்கப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.