உமா குமரன், பிரிட்டன் தமிழ் வம்சாவளி எம்.பி.
உமா குமரன், பிரிட்டன் தமிழ் வம்சாவளி எம்.பி.

பிரிட்டன் எம்.பி. ஆன உமா குமரன்- உருகவைக்கும் சித்திரம்!

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை ஈழத்தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், தொழில் கட்சியின் வேட்பாளராக லண்டன் நகரத்தின் கிழக்கில் உள்ள ஸ்ட்ரட்போர்டு- போ தொகுதியில் போட்டியிட்டார். 19,145 வாக்குகள் (44.1%) பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார்.

இவர் புதிதாக உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியின் முதல் எம்.பி. என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

இவரையடுத்து வந்த பசுமைக் கட்சி வேட்பாளர் ஜோ ஹட்சன் ஸ்மால் 7,511 வாக்குகள்(17.3%),

மூன்றாவதாக பிரிட்டன் உழைப்பாளிகள் கட்சி ஹலிமா கான் 3,274 வாக்குகள்(7.5%),

4ஆம் இடம் பெற்ற கான் பிளாக்வெல், பழைமைவாத கட்சி - கன்சர்வேட்டிவ் 3,114 வாக்குகள் (7.2%),

ஐக்கிய இரச்சிய மறுமலர்ச்சி கட்சியின் ஜெஃப் இவான்ஸ் 2,093 வாக்குகள்(4.8%),

தாராளவாத ஜனநாயகக் கட்சியின் ஜேனி லிட்டில் 1,926 வாக்குகள்(4.4%),

சுயேச்சைகளான நிசாம் அலி 2,380 வாக்குகள்(5.5%), உமர் பாருக் 1,826 வாக்குகள்(4.2%),

பியானோ லாலி 1,791 வாக்குகள் (4.1%), ஸ்டீவ் ஹெட்லி 375 வாக்குகள்( 0.9%) பெற்றுள்ளனர்.

ஆண்டுத் தொடக்கத்தில் போப்புடன் உமா
ஆண்டுத் தொடக்கத்தில் போப்புடன் உமா

தேர்தலுக்கு முன்னர் தமிழ் கார்டியன் இதழுக்கு உமா குமரன் அளித்த பேட்டியில், அவரைப் பற்றிய உணர்ச்சிமயமான ஆனால் உறுதியான அரசியல்வாதிச் சித்திரத்தை அறியமுடியும்.

கிழக்கு லண்டனில் வசிக்கும் உமாவின் பெற்றோர், 1980-களில் இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு அடைக்கலம் தேடிப் போனவர்கள். ”நம் தமிழ்க் குடும்பங்கள் அரசியலை ஒரு வாழ்க்கைப் பணியாக(, பொது சமூகத்துடன் கலக்கும் வழியாகக் கருதுவதில்லை. ஆனால் அடுத்த தலைமுறையினர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.” என துடிப்பாகப் பேசுகிறார்.

இத்துடன், கூடுதலான பெண்களை, தொழிலாளர் பின்னணியில் உள்ளவர்களை, சிறுபான்மைச் சமூகத்தினரை, எல்ஜிபிடிகியூ போன்ற பல்வேறு பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் தேவை என்கிறார் இந்த தொழில் கட்சி அரசியல்வாதி.

”பிரிட்டனின் பொது சுகாதாரத் துறையான என்.எச்.எஸ்.சில் ஏராளமான தமிழர்கள் பணியாற்றிவருகின்றனர். இது மட்டுமில்லை, வர்த்தகம், கலை, பண்பாடு, பிற பொது சேவைகளிலும் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக இருக்கிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ், லண்டன், அதற்கு அப்பால் என பிரிட்டனின் ஒவ்வொரு முனையிலும் தமிழ் மக்கள் வசிக்கிறோம். கிளாக்டன் பகுதிக்கு அண்மையில் நண்பர் ஜோவனுக்காகப் பிரச்சாரம் செய்யப் போயிருந்தேன். அங்கு ஒரு தமிழ்ப் பெண்மணியின் குரலைக் கேட்டேன்... அப்படியே மெய்மறந்துபோனேன். ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருக்கும் நமக்கு, தமிழில் அவ்வளவு அழகான உரையாடல் அவருடன்... ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்காக எத்தனையோ பிரச்னைகளை எடுத்துச்சென்றிருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து செயல்படுகிறோம். ஆனால் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த பசும் இருக்கைகளில் உட்காரமுடியாதா என்ன என்கிற எண்ணம்தான் இப்போது...(இது தேர்தலுக்கு முன் என்பதை நினைவில் கொள்க)!”என அரசியலோடும் தமிழினப் பற்றோடும் வாழும் நாட்டுப் பற்றோடும் பேசுகிறார், உமா குமரன்.

உமாவின் பெற்றோர் அகதித் தஞ்சம்கோரி இங்கிலாந்துக்குச் சென்றபோது, அவர்களுக்கு உதவியவர் தொழில் கட்சி எம்.பி.யும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ஜெரிமி கோர்பின். ஹாரோ பகுதிக்கு அவர்கள் குடிபெயர அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்தார், உமா.

லண்டன் இராணிமேரி பல்கலைக்கழகத்தில் அரசியலில் இளநிலைப் பட்டமும் அரசு பொதுக்கொள்கை வகுப்புப் பாடத்தில் முதுநிலைப் பட்டமும் என ஒரே துறையில் அறிவை வளர்த்துக்கொண்ட உமா, முதலில் தேசிய சுகாதார சேவையில் வேலைசெய்தார்.

பின்னர், தொழில் கட்சி எம்.பி. டான் பட்லரிடம் ஆய்வாளராகவும் உதவியாளராகவும் 2 ஆண்டுகள் இருந்தவர், 2010 முதல் 5 ஆண்டுகள் உள்ளாட்சி அமைப்பு அளவில் தொழில் கட்சியின் பிரச்சாரக் குழுவில் பணியாற்றினார். 2017 முதல் 4 ஆண்டுகள் லண்டன் மேயர் சாதிக் கான் என்பவருக்கு மூத்த ஆலோசகராகவும் உமா இருந்தார்.

அடுத்து அவர் எட்டிய உயரம்தான் இந்த இடத்துக்குக் கொண்டுவந்தது என்றும் சொல்லலாம். புதிய பிரதமர் கீர் ஸ்டாமர் தொழில் கட்சியின் தலைவராக ஆனபோது 2020இல் அவருடைய நாடாளுமன்ற விவகாரங்களை கவனிக்கும் துணை இயக்குநராக ஆனார். பின்னர் இரண்டு ஆண்டுகள் பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டுக் குழுவுக்கு இயக்குநராகவும் பணியாற்றினார்.

முதல் முதலாக 2010 உள்ளாட்சித் தேர்தலில் லண்டன் ஹாரோ பாரோ பகுதிக்குப் போட்டியிட்டார்; ஆனால் வெற்றிபெறவில்லை. 2013இல் கிழக்கு ஹாரோ நாடாளுமன்றத் தொகுதிக்கு தொழில் கட்சியின் வேட்பாளராக ஆனார். 2015 தேர்தலில் பழைமைவாத கன்சர்வேட்டிவ் கட்சியின் பிளாக்மேன் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். அப்போது நடைபெற்ற பிரச்சாரத்தின்போது பிளாக்மேனின் ஆட்களால் உமாவும் இன்னொரு வேட்பாளரும் தாக்கப்பட்டனர். அடுத்து 2017 பொதுத் தேர்தலில் முன்னைய தேர்தல் பிரச்னைகளால் உமா போட்டியிடவில்லை. இப்போது புதிய தொகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முதல் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

” தொழில் கட்சியின் கொள்கைகள் என் ரத்தத்திலேயே இருக்கின்றன. அது, என் பெற்றோர், அவர்களின் பெற்றோர் மூலம் வழிவழியாக வந்தது... என் தாத்தா யாழ்ப்பாணத்தில் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவர். அவருடைய அப்பா அதாவது என் கொள்ளுத் தாத்தா தன் மகன் இப்படி தொழிற்சங்கத்தில் மூழ்கிவிடுகிறானேயென ஒரு முறை வீட்டை விட்டே விரட்டியிருக்கிறார். குறிப்பாக, துப்புரவுப் பணியாளர்களுக்காக என் தாத்தா அங்கு கடுமையாகப் பணியாற்றியிருக்கிறார். அவர்களின் குடும்பங்களில் இப்படியெல்லாம் செயல்பட விடமாட்டார்களாம். என்னுடைய இரண்டு தாத்தாக்களும் அரசுப் பணியாளர்களாக இருந்ததால், பொது சேவை பற்றிய ஒரு பார்வை இருக்கிறது. லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா எனப் பரந்திருக்கும் எங்கள் குடும்ப உறவுகளில் அது புதைந்துகிடக்கிறது.

நான் என்னுடைய வரலாற்றின் உருவாக்கம்தான். இங்கு நான் பிறந்தது விதி. 80களில் இங்கு என் பெற்றோர் வந்தார்கள். 40 ஆண்டுகளாக அவர்கள் தங்களின் வாழ்க்கைப்பாடுகள், துயரக் கதைகள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்கு இருக்கிறார்கள் என ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள முடியாமலே வாழும் நிலை, உயிரோடு இருக்கிறார்களா இறந்துபோய்விட்டார்களா என்பது தெரியாமல், எத்தனையோ மரணங்கள், எவ்வளவு பெரும் பேரழிவு... இவை எல்லாம் என்னில் தங்கிவிட்டவை.

பிரிட்டன் எங்களுக்கு பாதுகாப்பான அடைக்கலத்தைக் கொடுத்தது. குடிவரவு வழக்கில் தொழில் கட்சி எம்.பி. (ஜெரிமி கோர்பின்) செய்த உதவி பெரியதாகும். போர் எங்கள் பெற்றோரின் - ஏன் பத்து லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. இந்த பூமியின் சகல இடங்களிலும் நாங்கள் புலம்பெயர்ந்து இருக்கிறோம். இப்போதும் அதை நான் உணர்ந்தபடியே இருக்கிறேன்.

அண்மையில் நடந்த சம்பவம்... ஆஸ்திரேலியாவில் வசித்த என் அம்மம்மா போன மாதம் இறந்துவிட்டார். அவருடைய இறுதி நிகழ்வில் என்னால் அங்கு போய்ச்சேர முடியவில்லை. உடனே என் பிரச்சாரத்துக்குத் திரும்பிவிட்டேன். அதிகாலைப் பொழுதில் அவருடைய இறுதி நிகழ்வில் இங்கிருந்தபடியே பங்கேற்றேன் எனச் சொல்லமுடியாது; பார்க்கத்தான் முடிந்தது. அந்தவொரு துயரிலும் சில ஊடக நேர்காணல்களையும் நான் அளிக்கவேண்டி இருந்தது. யதார்த்தமான இந்த வாழ்க்கைதான், கடல்கள் எங்களைப் பிரித்துவைத்திருக்கிறது என்பது அதிக துயரில் எங்களை ஆழ்த்துகிறது.

ஆனாலும் அவர் எங்கள் மீது என் பெற்றோர், கணவர், பிள்ளைகள் மீது பெருமைகொள்வார். ஆகவே, நம் சமூகமும்கூட அதே ஆதரவையும் அன்பையும் பொழிவதாகவே உணர்கிறேன்; என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.” என்று மனம் உருகப் பேசியிருக்கிறார், உமா குமரன்.

கெவின்  ஹரன்
கெவின் ஹரன்

கெவின் ஹரன்(பழைமைவாதக் கட்சி), தென்கோடி கிழக்கு- ராச்ஃபோர்டு தொகுதியில் 11,368 வாக்குகள் (28.7%) பெற்று தோல்வியைத் தழுவினாலும், இரண்டாம் இடத்தில் வந்துள்ளார்.

கிருஷ்ணி ரசீகரன்
கிருஷ்ணி ரசீகரன்

கிருஷ்ணி ரசீகரன் (தொழில் கட்சி) தான் போட்டியிட்ட சட்டன் - சீம் தொகுதியில் 8,430 வாக்குகள் (17.7%) பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

தேவினா பால்
தேவினா பால்

தேவினா பால், (தொழில் கட்சி) ஹம்ப்ளே பள்ளத்தாக்கு தொகுதியில் போட்டியிட்டு 8,753 வாக்குகள்(16.2%) பெற்று மூன்றாம் இடம் வந்துள்ளார்.

நரணீ ருத்ரா ராஜன்
நரணீ ருத்ரா ராஜன்

நரணீ ருத்ரா ராஜன் (பசுமைக் கட்சி), ஹம்மர்ஸ்மித்- சிஸ்விக் தொகுதியில் போட்டியிட்டு 4,468 வாக்குகள் (9.7%) பெற்று மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளார்.

மயூரன் செந்தில்நாதன்
மயூரன் செந்தில்நாதன்

மயூரன் செந்தில்நாதன், (ஐக்கிய இராச்சிய மறுமலர்ச்சி கட்சி) எப்சம் - இவல் தொகுதியில் போட்டியிட்டு 5,795 வாக்குகள் (10.6%) பெற்றார். இவருக்கு நான்காம் இடம் கிடைத்தது.

கமலா குகன்
கமலா குகன்

கமலா குகன் (தாராளவாத ஜனநாயகக் கட்சி), ஸ்டேலிபிரிட்ஜ் - ஹைடு எனும் தொகுதியில் போட்டியிட்டு, கடும் போட்டியால் 1,080 வாக்குகள் (2.9%) பெற்று ஏழாம் இடத்தில்தான் வரமுடிந்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com