ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டம், ஜெனீவா
ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டம், ஜெனீவா

கேட்குமா இலங்கை? ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வலியுறுத்தல்!

Published on

ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் 56ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்றுவருகிறது. இலங்கை விவகாரம் தொடர்பான அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உட்பட்ட இணைத் தலைமை நாடுகள் சார்பில் நேற்று அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

கனடா, மலாவி, மாண்டிநீக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளையும் கொண்ட அந்தக் குழுவின் அறிக்கையில், போருக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் ஐ.நா.வுக்கு அளித்த உறுதிமொழிகள் விரிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

அப்பாவிப் பொதுமக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்படுவது, அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்யவேண்டும் என்றும், தீவிரவாத எதிர்ப்பு, இணையப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகக் கொண்டுவரப்படும் எந்தப் புதிய சட்டமும் குடிமக்கள் அனைவரின் அடிப்படை கருத்து சுதந்திரத்தைக் காப்பதாகவும் இருக்கவேண்டும்; குறிப்பாக மனிதவுரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும் என்றும் இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் அதிபர் தேர்தல் வரவுள்ள நிலையில், பொறுப்பு அதிபராகப் பதவிவகிக்கும் ரணில் விக்கிரமசிங்கே அண்மையில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்தார்; அப்போது, இராணுவத்தினரின் வசமிருந்த தமிழர்களின் சிறிதளவிலான நிலங்கள் மக்களிடமே ஒப்படைக்கப்பட்டது. இதை அந்த அறிக்கையில் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர்.

இதேசமயம், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிப்பு, அது தொடர்பான பதற்றம், கைதுகள், தேடுதல் என்கிற பெயரில் நடத்தப்படும் மீறல்கள், தடுப்புக் காவலில் மோசமான நடவடிக்கைகள் ஆகியவை கவலைக்குரியவையாக இருக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போருக்கும் அமையவேண்டிய சகஜ நிலைமைக்கும் இடைப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான ஏற்பாடுகள் சுயேச்சையான- பக்கச்சார்பில்லாத- வெளிப்படையான தன்மையில் அமையவேண்டும் என்றும் இணைத்தலைமை நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com