அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த விசா கட்டுப்பாட்டிற்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் பயிலவும், அங்குள்ள முன்னணி ஊடகங்களில் பணியாற்றவும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இலட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் அமெரிக்காவிற்குச் செல்கின்றனர்.
டிரம்ப் தலைமையிலான தற்போதைய அரசு, அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்குவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தி வருகின்றது.
இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்கள், பத்திரிகையாளர்களின் விசா காலத்திற்கு கடுமையான உச்சவரம்பை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்தது.
இதனால், வெளிநாட்டு மாணவர்களின் விசா காலத்தை அதிகபட்சமாக 4 ஆண்டுகளாகவும், பத்திரிகையாளர்களின் விசா காலத்தை 240 நாள்களாகவும் குறைக்கத் திட்டமிட்டது.
இந்தப் புதிய விதி செயல்பாட்டுக்கு வந்தால், 6 ஆண்டுகள் வரை நீடிக்கும் பிஎச்.டி. போன்ற படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.
புதிய விதிமுறை நேற்று முதல் செயல்பாட்டுக்கு வரவிருந்த நிலையில், புதிய விசா கட்டுப்பாட்டை எதிர்த்துப் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்த அவசர வழக்கை மசாசூசெட்ஸ் பெடரல் நீதிமன்றம் விசாரித்தது.
விசா கட்டுப்பாடு செயல்பாட்டுக்கு வந்தால், அமெரிக்காவின் உயர்கல்வித் துறைக்கும், பொருளாதாரத்திற்கும் பேரழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும், அமெரிக்க அரசை விமர்சிக்கும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் விசா மறுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
எனவே, டிரம்ப் அரசின் புதிய விசா கட்டுப்பாட்டிற்கு மசாசூசெட்ஸ் பெடரல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.