வியட்நாமில் உள்ள பிரபல சுற்றுலாத் தீவான பூ குவொக் அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு ஒன்று கவிழ்ந்ததில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
இதில் தமிழ்நாட்டின் பழனியைச் சேர்ந்த முருகன் என்பவரும் இறந்துபோனார்.
இந்திய சுற்றுலாப் பயணிகள் 32 பேர், 4 பணியாளர்கள் என மொத்தம் 36 பேர் இந்த அதிவேகப் படகில் சவாரி செய்தனர். கரையிலிருந்து 400 மீட்டர் தொலைவில் சென்றபோது, பலத்த காற்று, கடுமையான அலைச் சீற்றத்தில் சிக்கியதால் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும், கடலோரக் காவல்படை, கடற்படை மீட்புக் குழுக்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன.
இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்கப்பட்ட பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து வியட்நாம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியத் தூதரகமும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறது.