இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால், 50அடி உயரத்திற்கு வெளியேறிய சாம்பல் புகை காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் சுண்டா நீரிணையில் ஜாவா – சுமத்ரா தீவுகளுக்கு இடையே செயல்பாட்டில் உள்ள அனக் கிரகடாவ் எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், 50 அடி உயரத்திற்கு வெளியேறிய சாம்பல் புகை ஜாவா, ஜகார்த்தா, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவியது.
இதனால் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சுகர்னோ – ஹட்டா சர்வதேச விமான நிலையம் உட்பட 8 இந்தோனேசிய விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால், 1,558 விமானங்கள் தாமதமானதுடன் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 900 விமானங்கள் இதனால் பாதிப்படைந்துள்ளன.
இதைதொடர்ந்து, 1,70,00 பயணிகள் பயணம் மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த எரிமலைக்கு அருகில் 3 கி.மீ. தூரத்திற்கு எந்த கப்பல்களும் பயணிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1883ஆம் ஆண்டு உருவான இந்த எரிமலை, தோன்றியதில் இருந்து அவ்வப்போது வெடித்து வருகின்றது. கடந்த 2018ஆம் ஆண்டு இந்த அனக் கிரகடாவ் எரிமலையின் பாகங்கள் சிதறியதால் ஏற்பட்ட சுனாமியில் 429 பேர் உயிரிழந்தனர்.
அண்மையில் ஏற்பட்டுள்ள இந்த எரிமலை வெடிப்பினால், சுனாமி உருவாகும் அபாயம் இல்லை என்று லானா சரியா என்பவரின் தலைமையில் உள்ள புவியியல் முகமை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு நாடான இந்தோனேசியா, பசிபிக் நெருப்பு வளையத்திற்குள் இருப்பதால், பூமிக்கு அடியில் இருக்கும் தட்டுகள் உரசி இதுபோன்ற எரிமலை வெடிப்பு, நில அதிர்வு போன்றவை அவ்வப்போது ஏற்படுகின்றன.