பிரச்னைகள் நிறைந்த அரபு தேசத்தில் இன்னொரு பிரச்னை. இம்முறை சிரியாவில். அங்கு அதிபர் அசாத் அல் பஷாரின் ஆட்சி கவிழ்ந்து, அவர் குடும்பத்தோடு தலைநகர் டமாஸ்கஸை விட்டு சிறப்பு விமானத்தில் ஓடிவிட்டார்.
எப்பேர்ப்பட்ட அதிபர்?
1971- இல் அவரது தாத்தா ஹபெஸ், பிறகு அப்பா, இப்போது அசாத் என்று மூன்று தலைமுறைகளாக 54 ஆண்டுகள் தொடர்ந்த ஆட்சி. சிரியா என்றால் அசாத்துக்கு உரிமையான பூமி என்றே பட்டா போடப்பட்ட நாடு. சர்வ வல்லமை படைத்தவர். அமெரிக்காவுக்கு எதிரான ஈரான், ஹிஸ்புல்லா, சில ஈராக்கிய ஆயுதக் குழுக்கள், ஏமனின் ஹௌதிகள், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த சிரியா இப்போது அசாத் சொத்து கிடையாது.
’நாங்கள் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுவிட்டோம்’ என சிரியர்கள் சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியைப் பகிர்கிறார்கள். சிறைகள் உடைக்கப்பட்டு, கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். அசாத்தின் சிலைகள் நொறுக்கப்படுகின்றனர். சிரிய ராணுவத்தினர் சீருடைகளையும் ஆயுதங்களையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். முக்கிய ராணுவ தளபதியொருவர் தற்கொலை.
அசாத்தின் வீழ்ச்சி படுவேகமாக 11 நாட்களில் நடந்துள்ளது. அவருக்கு எதிரான சிரிய ஆயுதக் குழுக்களின் நடவடிக்கையால் சீட்டுக்கட்டுபோல் வரிசையாக அவரது ஆதரவுக் களம் சரிந்துபோய்விட்டது.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக அமைதிப் புரட்சியாகத் தொடங்கிய மக்கள் போராட்டம் பின்னர் சிரிய ராணுவத்துக்கு எதிரான மதவாத ஆயுதக்குழுக்களின் போராட்டமாக மாறியது. இத்தனை ஆண்டுகளில் அது வலுவாகி அவரை விரட்டி இருக்கிறது. 2018 இல் இருந்தே சிரியா என்பது பெயரளவுக்குத்தான் ஒரு நாடு. உண்மையில் அது வேறுபட்ட குழுக்களின் கட்டுப்பாட்டில் தன் பகுதிகளை இழந்த நாடாக இருந்தது.
அதன் வட மேற்கே உள்ள இட்லிப் என்ற மாநிலம், ஹயத் அல் தாரிர் அல் ஷாம்( ஹெச்.டி.எஸ்) என்ற சன்னி இஸ்லாமிய மதவாத ஆயுதக் குழுவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இது அல் காய்தாவின் சிரியக் கிளை ஆட்களும் ஜபாத் அல் நுஸ்ரா என்ற இன்னொரு அமைப்பும் இணைந்து உருவானது.
சிரியாவின் வடகிழக்குப் பகுதி இப்போது குர்தியர்களின் சிரிய ஜனநாயக படை என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு அமெரிக்க ஆதரவு உள்ளது.
வடமேற்கில் அசாஸ் என்ற நகரைச் சுற்றி இருக்கும் பகுதிகளை துருக்கியை தளமாகக் கொண்ட சிரிய தேசியப்படை என்ற அமைப்பு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
தெற்குப் பகுதியில் கொஞ்சம் இடங்கள் ஜோர்டானின் ஆதரவு பெற்ற சில புரட்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதிப்பகுதிதான் அண்ணன் அசாத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது.
இந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி திடீரென இந்த ஆயுதக்குழுக்கள் அனைத்துக்கும் திடீர் வேகம் பிடித்தது. ஹெச் டி எஸ் அமைப்பும் அதன் ஆதரவுக்குழுக்களும் கிளம்புடா டமாஸ்கஸுக்கு என ஆயுதங்களுடன் கிளம்பிவிட்டார்கள். ஏற்கெனவே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், ஊழல், இஸ்ரேலின் குடைச்சல் ஆகியவற்றால் தடுமாற்றத்தில் இருந்த சிரிய நகரங்கள் ஒவ்வொன்றாக வீழ்ந்தன. டமாஸ்கஸும் இவர்கள் கையில் போய்ச் சேர்ந்தது.
அசாத் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனார். அவரது பிரதமர், எதிர்க்குழுக்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதாகச் சொன்னார். இதை தொடர்ந்து ஆட்சி மாற்றத்தின்போது புரட்சிகரக் குழுக்கள் செய்யும் அனைத்தும் நடந்தன. பக்கத்து நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் உயிர்தப்பி அசாத்தின் ஆட்சியில் ஓடிப்போயிருந்த பல லட்சக் கணக்கான சிரிய அகதிகள் வந்து சேர்ந்தவண்ணம் இருக்கிறார்கள்.
அசாத்தின் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் ரஷ்யா, ஹிஸ்புல்லா, ஈரான். ரஷ்யா உக்ரைனில் மல்லுக் கட்டுகிறது. ஹிஸ்புல்லாவும் ஈரானும் இஸ்ரேலுடன் மோதிக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு உதவிக்கு யாரும் இல்லாத சூழல், இந்த வீழ்ச்சியைத் துரிதப்படுத்தி விட்டது.
அபு முகமது அல் ஜுலானி. இந்த பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். இவர்தான் ஹெச்டிஎஸ் அமைப்பின் தலைவர். இந்த வெற்றிக்குத் தேவையான உந்துதலைக் கொடுத்தவர். பெரும்பாலும் இவர் சொற்படித்தான் புதிய சிரிய அரசு நடக்கும். ஜுலானி தலைக்கு அமெரிக்கா பெரும் விலை அறிவித்து தீவிரவாதிகள் பட்டியலில் வைத்துள்ளது. இவர் தன் அல்காய்தா தொடர்பை விட்டு விலகி இப்போது மாறி விட்டதாக சில காலமாகக் கூறிவருகிறார்.
ஜுலானி முதலில் சிரியாவில் இருந்து ஈராக் சென்று அமெரிக்க ஊருருவலை எதிர்த்துப் போரிட்டார். அங்கிருந்து ஐஎஸ்ஐ (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக்) அமைப்பின் தலைவரால் சிரியாவுக்கு 2011 அமைதிப் போராட்டத்தைத் தொடர்ந்து அனுப்பப்பட்டார். சிரியாவில் அவர் அல் நுஸ்ரா என்ற அமைப்பைத் தொடங்கி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார். விரைவில் இந்த அமைப்பு முன்னிலை பெற்றது. அதுவரை ஐஎஸ்ஐ அமைப்பின் கிளைதான் இது என யாருக்கும் தெரியாது. 2013-இல் ஈராக்கில் இருந்த ஐஎஸ்ஐ, நுஸ்ராவை தன்னுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்தது. தனிக்கடை போட்டிருந்த ஜுலானிக்கு இது பிடிக்கவில்லை. உடனே அல்காய்தாவின் கிளையாக இதை மாற்றிக்கொண்டார். தனக்கு ஐஎஸ்ஐயின் வன்முறையான அணுகுமுறை பிடிக்கவில்லை என்று அவர் காரணம் கூறினார். 2016-இல் இட்லிப் மாநிலத்தைப் பிடித்த பின் அல்காய்தாவில் இருந்து விலகுவதாகக் கூறி, தன் அமைப்பை ஹெச் டிஎஸ் என்று மறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டார். அவரும் பழைய இஸ்லாமிய மதகுரு ஆடைகளைத் துறந்து ராணுவ உடைகளுக்கு மாறி தோற்றமளிக்க ஆரம்பித்தார்.
ஆனாலும் மேலை நாடுகள் இவரை தீவிரவாதிப் பட்டியலில் அல்காய்தா தொடர்பால் சேர்த்தன. இந்த விலகல் சும்மா நடிப்புதான் என்பது அவர்கள் கருத்து. பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவர் தலைக்கு விலை வைக்கப்பட்டது.
தற்போது சிரியாவின் இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்று இருக்கும் முகமது அல்பஷீர் என்பவர் இட்லிப் மாநிலத்தில் ஜுலானியின் அமைப்பு நடத்திய அரசில் அமைச்சராக இருந்தவர்தான்.
சிரியாவில் இருக்கும் கிறிஸ்துவர்கள், அலவாதிகள், உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று இவர் கூறி இருக்கிறார்.
பக்கத்தில் இருக்கும் ஈரான், அசாத்தின் ஆட்சி வீழ்ந்ததன் பின்னால் இஸ்ரேல், அமெரிக்க சதிதான் உள்ளது எனக் கூறி இருக்கிறது.
சிரியாவில் நிலைத்த அரசு அமையுமா? ஆயுதக்குழுக்களின் அதிகாரப்போட்டியில் நாடு சின்னாபின்னமாகுமா என்பதைத்தான் உலகமே உற்றுக் கவனிக்கிறது.