சம்பளத்தில் 40% குறைத்துக்கொண்ட ஜனாதிபதி!

ஜோசப் போகாய், லைபீரிய குடியரசுத்தலைவர்
ஜோசப் போகாய், லைபீரிய குடியரசுத்தலைவர்
Published on

இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ தொகுதி நிதியையும் சம்பளத்தையும் உயர்த்தவேண்டும் என சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர் தன் சம்பளத்தில் 40 சதவீதத்தைக் குறைத்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.  

அந்த நாடு, லைபீரியா. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது என்பது தெரியும். 

லைபீரியாவில் கடந்த ஜனவரிவரை குடியரசுத்தலைவராக இருந்த ஜார்ஜ் வீயின் ஆட்சிக்காலத்தில் ஆடம்பரம், ஊதாரித்தனமான முறையில் அரசுப் பணம் செலவிடப்பட்டதாக அவர் மீது நாடளவில் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் தோன்றியது. அதைத் தொடர்ந்து அவர் தோற்கடிக்கப்பட்டார். 

புதிய அரசுத்தலைவராக வந்துள்ள ஜோசப் போகாய், தன்னுடைய சம்பளத்தில் 40 சதவீதத்தைக் குறைத்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். இதன்மூலம் அவரின் ஆண்டு வருமானம் 13,400 அமெரிக்க டாலரிலிருந்து 8,000 டாலராகக் குறையும்.

இதைப் பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். நல்லவொரு முன்மாதிரி என்றும் பாராட்டியுள்ளனர். 

முன்னர், ஜார்ஜ் வீயும் தன் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக அறிவித்திருந்தார். ஆனால் அதை மக்கள் நம்பவில்லை. அந்த அளவுக்கு அரசுத் தரப்பில் நிதி மேலாண்மை மிக மோசமானதாக இருந்தது.  

இப்போது அரசுத் தலைவரே சம்பளத்தைக் குறைத்துள்ளதால், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், தங்களின் ஊதியத்திலும் கைவைத்துவிடுவாரோ என அரசு ஊழியர்கள் திகைப்படைந்தனர். ஆனால், அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கான நியாயமான ஊதியம் வழங்கப்படும் என உறுதியளிப்பதாக போகாய் அவர்களின் வயிற்றில் பால்வார்த்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com