ஓபன்ஏஐ நிறுவனம் மீது குற்றஞ்சாட்டிய இந்தியர் மரணம்... பின்னணி என்ன?

Suchir Balaji
சுசிர் பாலாஜி
Published on

ஓபன்ஏஐ நிறுவனம் மோசடி செய்வதாக குற்றம்சாட்டியிருந்த, இந்தியாவைச் சேர்ந்த இளம் ஆராய்ச்சியாளர் சுசிர் பாலாஜி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற இந்தியாவை சேர்ந்த சுசீர் பாலாஜி (26), அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (OpenAI) நிறுவனத்தில், கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும், சேட்ஜிபிடி (ChatGPT)-யை உருவாக்கிய குழுவில் முக்கிய அங்கமாக இருந்துள்ளார். இதுதவிர வெப் ஜிபிடி (WebGPT), ஜிபிடி-4 (GPT-4) போன்ற பிற திட்டங்களிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்த நிலையில், அந்தப் பணியில் இருந்து வெளியேறிய அவர் கடந்த அக்டோபர் மாதம், ‘தி நியூயார்க் டைம்ஸ்’க்கு பேட்டியளித்திருந்தார். அதில், காப்புரிமை தரவை ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

” ஓபன் ஏ.ஐ., நிறுவனம், காப்புரிமை சட்டத்தை வெளிப்படையாக மீறுகிறது. இணையதளத்தில் இருந்து காப்புரிமை பெற்ற தகவல்களையும் தன் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தியுள்ளது. இந்த மோசடியால் பல நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளன. அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் வகையில் உள்ளதால், இந்த தொழில்நுட்பம் நீண்ட காலம் நீடிக்காது.நான் நம்புவதை நீங்களும் நம்பினால், உடனடியாக இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறுங்கள் என, அங்கிருக்கும் ஊழியர்களை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, இணையதளங்களில் உள்ள பொதுவான தகவல்களையே நாங்கள் பயன்படுத்தியுள்ளோம் என, ஓபன் ஏ.ஐ., நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.” எனக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இவரது கருத்தை நிரூபிக்கும் வகையில் காப்புரிமை சட்டத்தை மீறியதாக ஓபன்ஏஐ நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான், கடந்த நவம்பர் 26ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். சுசீர் பாலாஜியின் மரணம் குறித்து, ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com