அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சாண்டா கிளாராவில் வசித்துவந்தவர் முகம்து நிசாமுதீன். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவந்த இவருக்கு வயது 29.
இளநிலைப் பட்டத்தை இந்தியாவில் படித்து, முதுநிலைப் பட்டத்தை முடித்து அமெரிக்காவில் பணியில் சேர்ந்தார்.
நண்பர்களுடன் சேர்ந்து தங்கி பணிக்குச் சென்றுவந்த நிலையில், அறை நண்பருக்கும் இவருக்கும் கடந்த 3ஆம் தேதி வாக்குவாதம் எழுந்துள்ளது. அதில் இருவரும் பரஸ்பரம் தாக்கிக்கொண்ட நிலையில், காவல்துறைக்குத் தகவல் போனது.
அவர்கள் இவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கையில் கத்தியுடன் நிசாமுதீன் தன் நண்பரைத் தாக்கத் தயாராக இருந்தார் என்பது போலீஸ் தகவல்.
அப்படியொரு சூழலில் அவரைக் காவல்துறை சுட்டதாகக் கூறப்படுகிறது.
போலீஸ் சுட்டதில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்லப்பட்டு, முன்னரே நிசாமுதீன் இறந்துவிட்டதாகத் தெரியவந்தது என அமெரிக்க போலீஸ் சொல்கிறது.
இன்னொரு நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர் சிகிச்சையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், நண்பர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டதாகத் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் போலீஸ் ஏன் சுட்டுக்கொல்ல வேண்டும் என்பது புரியவில்லை என்றும் நிசாமுதீனின் தந்தை ஹஸ்னுதீன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சம்பவம் 3ஆம் தேதியன்றே நிகழ்ந்தும் தங்களுக்கு நேற்று வியாழக்கிழமைதான் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.