சிங்கப்பூர் நாட்டின் ஏற்றுமதியில் சரிவு தொடர்துவருவது, அந்நாட்டுத் தொழில் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் முக்கியமான சில ஏற்றுமதிகள் ஐந்து மாதங்களாக சரிவைக் கண்டுவருகின்றன.
சென்ற ஆண்டை ஒப்பிட, 1.3 சதவீத ஏற்றுமதி குறையும் என புளூம்பெர்க் ஆய்வு வல்லுநர்கள் கணித்திருந்தனர். ஆனால், எண்ணெய்சாராத தயாரிப்புகளின் ஏற்றுமதி கடந்த மாதத்தில் 8.7 சதவீதம் குறைந்திருக்கிறது. மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 9.5 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இத்தனைக்கும் இதே துறை அதற்கு முந்தைய மே மாதத்தில் 19.6 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருந்தது. ஆனால், போன மாதம் தொலைத்தொடர்புக் கருவிகளின் ஏற்றுமதி பாதிக்குப்பாதி அதாவது 50.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. அதுவே மொத்த சரிவுக்கும் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதேபோல, தங்கக்கட்டி ஏற்றுமதியும் அதிக அளவில் 51.1 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது.
மின்னணுப்பொருள் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 8.5 சதவீதம் அளவுக்குக் குறைந்தது.
சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 21.3 சதவீதமும், சீனாவுக்கு 11.2 சதவீதமும் குறைந்துள்ளன.
இதே சமயம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 6.2 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டிருப்பது ஆறுதலை அளிக்கக்கூடியதாக உள்ளது.
பக்கத்தில் உள்ள கிழக்காசிய நாடுகளான மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகியவற்றுக்கான ஏற்றுமதி மகிழ்ச்சி அளிக்கும்படியாக அதிகமாகவே உள்ளது.