மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. அதன் தலைநகர் டமாஸ்கசில் நுழைந்த கிளர்ச்சிப் படையினர் நகரைக் கைப்பற்றியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரீர் அல் ஹாம் என்ற கிளர்ச்சிப் படையினர் ஒரு வாரமாக அரசுப் படைகளுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ள கிளர்ச்சிப் படையினர், வடமேற்கு சிரியாவில் தாக்குதல் நடத்தினர். அதில், படையினர் உட்பட முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கடந்த சனியன்று கிளர்ச்சிப் படை கைப்பற்றியது.
இந்நிலையில் சிரியத் தலைநகர் டமாஸ்கசுக்குள் நுழைந்துவிட்டதாக கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், டமாஸ்கசின் மோவாதமியா அல்-ஷாம், தரயா உட்பட்ட புறநகர்ப் பகுதிகளிலிருந்தும் மிஜ்ஜே படை விமானதளத்திலிருந்தும் இராணுவம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.