நேபாளத்தில் மூன்று ஆறுகளில் நீர்மட்டம் அபாயகட்டத்தை எட்டியதால் அதன் மத்திய, மேற்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீரியல், வானிலை ஆய்வுத் துறைகளின் பேரிடர் முன்னறிவிப்புப் பிரிவினர், சிந்துலி மாவட்டத்தில் சன்கோசி ஆறு, கோர்க்கா மாவட்டத்தில் புத்தி கண்டகி ஆறு, தாடெல்துராஅ மாவட்டத்தில் மகாகாளி ஆறு ஆகியவற்றில் இன்று காலை 6 மணிக்கு நீர்மட்டம் எச்சரிக்கை கட்டத்தைத் தாண்டிவிட்டது.
லம்ஜங் மாவட்டத்தில் மர்சியாங்டி ஆற்றில் இன்று முற்பகல் 11.15 மணியளவில் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டியது என்று புகுந்தபேசி கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதே ஆற்றில் தொடர்ச்சியாக நீர்மட்டம் அதிகரித்தபடி இருக்கிறது என்றும் இந்நிலை தொடர்ந்தால் அதிக வெள்ளத்துக்கான வாய்ப்பு உண்டு என்றும் நீரியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆற்றுநீர்மட்டம் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதால், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் எச்சரிக்கையாக இருக்குமாறும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
கரையோர மக்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும்வகையில் விழிப்பாக இருக்கும்படியும் பாதுகாப்பான இடங்களை உறுதிப்படுத்திக்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காத்மாண்டு உட்பட நேபாளத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது பருவமழைக் காலம் முடியாமல் தொடர்வதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.