மியான்மர்- 1002 பேர் உயிரிழப்பு : அரசு தகவல்!

மியான்மர்- 1002 பேர் உயிரிழப்பு : அரசு தகவல்!
Published on

மியான்மரில் நேற்று நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்தில் ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உள்நாட்டுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் புள்ளிகள் அளவுக்கு மோசமான நிலநடுக்கம் உண்டானது. உயரமான கட்டடங்கள் சில நிமிடங்களில் சீட்டுக் கட்டுகளைப் போல விழுந்து நொறுங்கின. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் இறந்திருக்கலாம் என அமெரிக்கப் புவியியல் சேவை அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அரசுத் தரப்போ குறைவாகவே இழப்புகளைத் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான தாய்லாந்திலும் சீனத்தின் எல்லைப் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது.

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலாயில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டபோதும் மீட்புப் பணிகளில் ஈடுபட அரசுத் தரப்பில் ஏற்பாடுகள் இல்லாமல் ஏராளமானவர் நிர்கதியாக உள்ளனர்.

தாய்லாந்தின் பாங்காக்கில் விழுந்து நொறுங்கிய 33 அடுக்குக் கட்டடத்தின் இடிபாடுகளில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் இருந்த 47 பேரின் கதி தெரியவில்லை.

மியான்மரின் இராணுவ ஆட்சியாளர் ஜுண்டா சர்வதேச உதவியைக் கோரியுள்ளார். அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலாய் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

மியான்மரின் எதிர்க்கட்சியின் கணிப்புப்படி 2,900 கட்டடங்கள், முப்பது சாலைகள், ஏழு பாலங்கள் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளன.

கடும் சேதம் காரணமாக மண்டலாய், நைபிடாவ் சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

சீனத்து அரசு அனுப்பிய உதவி விமானம் யாங்கூன் விமானநிலையத்தைச் சென்றடைந்தது. அங்கிருந்து பல நூறு கி.மீ. தொலைவில் உள்ள மண்டலாய், நைபிடாவ் பகுதிகளுக்கு பேருந்துகளில் செல்ல முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சீனத்தின் சார்பில் 13.77 மில்லியன் டாலர் உதவி வழங்கப்படும் என்று அந்நாட்டின் தலைவர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் சார்பில் 40 டன் மனிதாபிமான உதவிப் பொருட்கள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மீட்பு உதவி விமானமும் யாங்கூனுக்குச் சென்றடைந்துள்ளது.

இரசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் மியான்மருக்கு உதவிகளை வழங்குகின்றன.

தென்கொரியாவின் சார்பில் 2 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாங்காக்கில் கட்டுமானப் பணியில் இருந்தபோது மாட்டிக்கொண்ட கட்டுமானப் பணியாளர்களை டிரோன்கள், நாய்கள் மூலம் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் அனுதின் சன்விராகுல் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com