முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கண்டுபிடிப்பைக் காப்பியடிக்கும் சீனா!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கண்டுபிடிப்பைக் காப்பியடிக்கும் சீனா!

புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் முக்கியமான ஆபத்து பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டும் உயர்வதே. இதனால் உலகின் பல நிலப்பகுதிகள் கடலில் மூழ்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். அதேபோல பனிப்பாறைகள் நன்னீரை தேக்கி வைக்கும் மூலங்களாகவும் உள்ளன. அதிகமான பனிப்பாறைகள் உருகி, கடலில் கலந்தால் நன்னீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அறிவியலாளர் எச்சரிக்கிறார்கள்.

அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகிவரும் நிலையில், அதைக்காக்க பல உலக நாடுகள் இணைந்து செயலாற்றி வருகின்றனர். சீனாவிலும் அப்படியொரு பனிப்பாறை உள்ளது. அங்குள்ள தென்மேற்கு பகுதியில் உள்ள டகு என்ற பனிப்பாறை கடந்த சில ஆண்டுகளாக வேகமாக உருகி வருகிறது.

இந்த பனிப்பாறை லட்சக்கணக்கானோருக்கு நீர் ஆதாரமாக உள்ளது. அத்துடன் இங்கு ஆண்டு தோறும் சுமார் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனிப்பாறை மற்ற பனிப்பாறைகளை விட வேகமாக உருகுவதால், சீனா அரசு இதை பாதுகாக்க பல ஆண்டுகளாக பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, தற்போது புதிய அணுகுமுறையை எடுத்துள்ளது.

இங்குள்ள அறிவியலாளர்கள் தென்மேற்கு சீனாவின் டாகு பனிப்பாறையை உருகாமல் பாதுகாக்க ஒரு வெள்ளை நிற ஷீட் ஒன்றை தயாரித்து மூடி உள்ளனர். விஞ்ஞானிகள் இந்த ஷீட்டை மலையின் 4,300 சதுர அடி பரப்பளவில் பொருத்தி வருகின்றனர். அந்நாட்டின் நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான ஜு பின் தலைமையிலான குழு இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த ஷீட் கவர்கள் மிகவும் விலையுயர்ந்த மற்றும் மேம்பட்ட ஜியோடெக்ஸ்டைல்களால் ஆனது எனவும் இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்தால் பனிப்பாறையை காப்பாற்ற முடியும் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஷீட் முறையைக் கொண்டு அவர்கள் தொடர்ச்சியான சோதனைகளை நடத்தி வருகின்றனர். அறிவியலாளர்களின் சோதனையில் இந்த ஷீட் அமைப்புகள் 93 சதவீத சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் கொண்டவே எனவும் இதன் காரணமாக பனிப்பாறை அதிக அளவில் வெப்பத்தால் உருவகுவது தடுக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இப்படி ஷீட் கொண்டு மூடும் முறை பாதுகாப்பானது தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை இந்த சோதனை தொடரும் என்றும், அதன் பிறகு சீனாவில் உள்ள மற்ற பனிப்பாறைகளில் உள்ள ஷீட்களை பயன்படுத்தலாமா என்பதை அறிவியலாளர்கள் முடிவு செய்வார்கள். பனிப்பாறைகளை பிரதிபலிப்பு ஷீட் கொண்டு மூடுவது சீனாவின் புது யோசனை அல்ல. ஏற்கனவே, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பெரிய அளவில் அது பலன் தரவில்லை.

பூமியில் கரியமில வாயு வெளியேற்றத்தை நிறுத்துவதுதான் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்கும் என்பது அறிவியலாளர்களும் அரசுகளும் நன்கு அறிந்தவர்களே. ஆனால், அது தங்களுடைய அகோர வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என செய்ய முன்வருவதில்லை. சீனா மிக அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில், நம்ம ஊர் அரசியல்வாதி செல்லூர் ராஜூ, நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோல் பயன்படுத்தியதைப் போல, சீன அறிவியலாளர்களும் முயற்சித்து வருகிறார்கள்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com