
வெனிசுலா நாட்டில் அமெரிக்கப் படைகள் அத்துமீறிப் புகுந்து நடத்திய தாக்குதலில் நூறு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வெனிசுலா உள்துறை அமைச்சர் டியாஸ்டாடோ கபெல்லோ இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, சம்பவத்தில் இறந்துபோனவர்களைப் பற்றி திட்டவட்டமான தகவல்களை வெனிசுலா அரசுத் தரப்பு தெரிவிக்கவில்லை.
கடந்த 3ஆம் தேதி அன்று அமெரிக்காவின் அட்டூழியத் தாக்குதலில் காரகசில் 23 பேர் உயிரிழந்ததாக வெனிசுலா இராணுவத்தின் தரப்பில் கூறப்பட்டது.
வெனிசுலா அதிபர் மதுரோவுக்குப் பாதுகாப்பு அளித்த படையினரில் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, அவருக்குப் பாதுகாப்பை வழங்கிவந்த கியூபா நாட்டைச் சேர்ந்த 32 பேர் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் கியூபாவின் இராணுவ, உளவுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கியூபத் தரப்பு தெரிவித்தது.
இப்போதுதான் முதல் முறையாக 100 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரோவுடன் கைதுசெய்யப்பட்ட அவரின் மனைவி சிலியா புளோரஸ் அத்தாக்குதலில் தலையில் காயம் அடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரோவுக்கு அவருடைய காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் வெனிசுலா உள்துறை அமைச்சர் கபல்லோ கூறியுள்ளார்.