
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டு செயல்பட்டு வருவது தெரிந்ததே! அதன் மூலம் முதல் முறையாக ஒரு வேலை செய்துமுடிக்கப்பட்ட நற்செய்தி வெளியாகியிருக்கிறது.
வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகள் நாள் விழாவை முன்னிட்டு, தமிழ் இருக்கையின் சார்பில் திருக்குறள் ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
யூட்டியூப் வலைக்காட்சியிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்தப் படம், 33 நிமிடங்கள் 34 நொடிகள் ஓடுகிறது.
இதில், திருவள்ளுவர் உருவப்படம் பொதித்த பிரிட்டன் காலத்து நாணயம், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குறளைத் தமிழிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் பதிப்பிக்க ஆங்கிலேயர் எடுத்த முயற்சிகள், சென்னை, மயிலாப்பூர் வள்ளுவர் கோயில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம், குமரி வள்ளுவர் சிலை ஆகியன எடுத்துக்காட்டப்படுகின்றன.
வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் முன்னைய தலைவர் டாக்டர் ஆர்.பிரபாகரன் இதை எழுதி, தயாரித்துள்ளார். இவர், திருக்குறள் குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குநர் அம்ஷன்குமார் இந்த ஆவணப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை உருவாக்குவதற்கான நிதியாதாரத்தை, தமிழ் இருக்கையின் தலைவர் டாக்டர் ஜானகிராமன் தலைமையிலான வட அமெரிக்கத் தமிழர்கள் வழங்கியுள்ளனர்.
” தமிழர்களின் தொன்மையான அடையாளமான திருக்குறள், தமிழர்களால் தங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாகக் கருதப்படும் - மதிப்பீடுகளைக் கொண்ட ஒரு நூல். இது உலகளாவிய, மதச்சார்பற்ற, இன்றைக்கும் பொருத்தமான ஒன்று என்பதை நாம் அறிவோம். எவ்வாறாயினும், இதை உலக மக்களுக்கு அவர்கள் புரிந்துகொண்டுள்ள ஒரு பாணியில், ஒரு மொழியில் எடுத்துச்சொல்வதற்கு உரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தோம்.
இப்போது முதல் முறையாக, ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் உலகச் சிறந்த ஆவணப்படத்தை உருவாக்கப்பட்டுள்ளது.” என்று ஹார்வர்டு தமிழ் இருக்கையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.