எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்!

எழுத்தாளர் நாறும்பூநாதன்
எழுத்தாளர் நாறும்பூநாதன்
Published on

எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகியுமான நாறும்பூநாதன் மாரடைப்பால் சற்றுமுன் காலமானார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில், 1960இல் பிறந்தவர் நாறும்பூநாதன். கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரான இவர், வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். மனைவி, சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியை ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன் தீபக் கனடாவில் பொறியாளராக உள்ளார்.

திருநெல்வேலியைச் சுற்றி வாழ்ந்த சாதாரண மக்கள்முதல் புகழ் பெற்றவர்கள்வரை பலரைப் பற்றிய சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட இவரது ‘கண் முன்னே விரியும் கடல்’ ஒரு முக்கியமான தொகுப்பு நூல். திருநெல்வேலியைப் பற்றி இவர் எழுதியிருக்கும் ‘திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள்’ மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த நூல்.

நாறும்பூநாதனின் ’கனவில் உதிர்ந்த பூ’ என்ற சிறுகதை பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா தன்னாட்சிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இவரது சில கட்டுரைகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மக்களின் இலக்கிய முகமாக இருப்பவர் எழுத்தாளர் நாறும்பூநாதன். அவருக்குத் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு உ.வே.சா. விருது வழங்கிக் கௌரவித்தது. நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் பத்துக் கட்டுரைத் தொகுப்புகளும் இவரது இலக்கியப் பங்களிப்பாகப் பார்க்கப்படுகிறது. இவரின் மறைவுக்கு இலக்கியச் செயல்பாட்டாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com