ராகுல் காந்தி
ராகுல் காந்தி

“நீங்கள் தேச துரோகிகள்…தேச பக்தர்கள் இல்லை…!” – பாஜகவினரை வெளுத்து வாங்கிய ராகுல்!

நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “நீங்கள் தேச துரோகிகள்…தேச பக்தர்கள் இல்லை…!” என பாஜகவினரை குற்றம்சாட்டியுள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதம் இன்று பிற்பகல் தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சரியாக 12.10க்கு பேசத்தொடங்கினார். அப்போது, தன்னை மீண்டும் மக்களவையில் இணைத்துக் கொண்டதற்காக சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தார்.

ராகுலின் பேச்சுக்கு பாஜகவினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினாலும், அவர் தொடர்ந்து பேசினார்.

“எனது முந்தைய நாடாளுமன்ற உரையில் அதானி குறித்து பேசியது பலரை காயப்படுத்தி இருக்கலாம். அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், நான் உண்மையைத்தான் பேசினேன். இன்று என்னுடைய பேச்சு அதானி பற்றியதாக இருக்காது என்பதால் என்னுடைய பாஜக நண்பர்கள் பயப்படாமல் இருக்கலாம்.”என்றார்.

ரூமி மேற்கோளுடன் பேசத் தொடங்கிய ராகுல்,”நான் எனது மனதிலிருந்து பேச விரும்புகிறேன்; தலையிலிருந்து அல்ல. நான் அரசின் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை. அதனால் நீங்கள் அமைதியாக இருங்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான எனது இந்திய ஒற்றுமை யாத்திரை இன்னும் முடியவில்லை. நான் யாத்திரை சென்றபோது என்ன நோக்கத்துக்காக யாத்திரை செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அன்பைச் செலுத்துவதற்காகத்தான் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டேன் என்று புரிந்துகொண்டேன். இந்த நடைப்பயணத்தின்போது இந்தியாவில் விவசாயிகள் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன்.

மேலும், “நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை. ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியாவில் இல்லை. மணிப்பூரை இரண்டாகப் பிரித்து வைத்துள்ளார் பிரதமர் மோடி.” என ராகுல் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட பாஜக எம்.பி. கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் வடகிழக்கு மாநிலத்தில் என்ன செய்தது என்பது குறித்து கேள்விக் கேட்க வேண்டும் என்றார். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டதால் சில விநாடிகள் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய ராகுல், ”மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் மணிப்பூர் மக்களைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் இந்தியாவைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் துரோகிகள். தேச பக்தர்கள் அல்ல!

என் அம்மா இங்கே அமர்ந்திருக்கிறார். நீங்கள் என்னுடைய இன்னொரு அம்மாவை மணிப்பூரில் கொலை செய்தீர்கள். இந்திய ராணுவத்தால் ஒரேநாளில் மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர முடியும். ஆனால், நீங்கள் அதைச் செய்யவில்லை. இந்தியாவின் குரலைக் கேட்க மோடி தயாராக இல்லை.” என்று அனல் பறக்கப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் நடக்கும் ஒரு பேரணியில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி கிளம்பிச் சென்றார். போகும்போது எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றதாக அமைச்சர் ஸ்மிருதி ராணி உள்ளிட்ட பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com