மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தன்னுடைய எட்டாவது நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல்செய்தார். இதில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பீகார் மாநிலத்துக்கு ஐந்து முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 15 நிமிடங்கள்வரை வாசித்தார், அமைச்சர் நிர்மலா. தெலுங்குப் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டியவர், திருக்குறளையும் குறிப்பிடத் தவறவில்லை.
செங்கோன்மை அதிகாரத்தின்,
‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி’ என்கிற உள்ள குறளை மேற்கோள்காட்டி,
”உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன; அதுபோல நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.” எனும் பொருளையும் விவரித்தார்.
அவரின் அறிக்கை தாக்கலுடன் நாளைமறுநால் 3ஆம் தேதிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்:
* பீகாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்
* எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற 6 ஆண்டு கால சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* பீகாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் அமைக்கப்படும்.
* ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
6 ஆண்டுகளில் பருப்பு உற்பத்தி தன்னிறைவு
* பருப்பு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* 12.70 லட்சம் டன் உற்பத்தித்திறன் கொண்ட யூரியா தயாரிப்பு ஆலை அசாமில் அமைக்கப்படும்.
* உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம் கொண்டு வரப்படும்.
* பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடிவரை கடனுதவி வழங்கப்படும்.
* காலணி, தோல் துறையில் சிறப்புத் திட்டம் மூலம் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பொம்மை உற்பத்தி
* பொம்மை உற்பத்தித் துறையில் இந்தியாவை அந்தச் சந்தைக்கான சர்வதேச மையமாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக இரட்டிப்பாக்கப்படும், உத்தரவாத கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்படும்.
மாவட்டங்களில் புற்றுநோய் மையங்கள்
* அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த மூன்றாண்டுகளில் புற்றுநோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் ’டே-கேர் கேன்சர் மையங்கள்’ அமைக்கப்படும். இவற்றில் 200 மையங்களில் 2025 - 26 ஆண்டிலேயே அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப்படிப்பில் 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் ருவாக்கப்படும்.
* ‘இந்தியாவின் குணமாகுங்கள்’ ஹீல் இன் இந்தியா (Heal in India) பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்.
* புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே வேளையில் உயிர்காக்கும் 6 மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுக்கு ரூ.5000 கோடி
* ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.
* அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களில் புதிதாக 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
* செயற்கை நுண்ணறிவை கல்வியில் ஊக்குவிக்கும் வகையில் ரூ.5000 கோடி முதலீட்டில் ஒரு மையம் உருவாக்கப்படும்.
* உலகளாவிய நிபுணத்துவத்துடன் திறன் மேம்பாட்டுக்காக 5 தேசிய மையங்களை அமைக்கப்படும்.
அணு உலை மூலம் மின்சார உற்பத்தி
* அணு உலை மூலம் 2047ம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் அளவில் மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்படும்.
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு
* காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிப்பு.
* விண்வெளித் துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம் உருவாக்கப்படும்.
* பொருள் விநியோகம் செய்யும் டெலிவரி பணியில் உள்ள ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும்.
5 ஆண்டுகளில் 5 இலட்சம் தொழில்முனைவோர்
* சிறிய, பெரிய தொழில் உற்பத்தியை அதிகரிக்க 'தேசிய உற்பத்தி இயக்கம்' திட்ட உருவாக்கப்படுகிறது.
* 5 ஆண்டுகளில் 5 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மின்வாகனங்கள், செல் பேட்டரி விலை குறைவு
* மின்சார வாகனங்கள் மற்றும் செல்போன் பேட்டரி உற்பத்திக்கு வரி சலுகை.
* லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்கவரியில் இருந்து முழுமையான விலக்கு.
* பின்னலாடைகளுக்கு இறக்குமதி வரியில் சலுகை.
* தோல் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க தோல் இறக்குமதிக்கு வரிச் சலுகை.
பள்ளிகள், சுகாதார நிலையங்களில் இணையவசதி
* அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்.
* தாய்மொழியில் மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அடல் ஆய்வகங்கள் அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்படும்.
65 ஆயிரம் ஐ.ஐ.டி. படிப்புகள்
* ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக 10 ஆயிரம் பேருக்கு பிரதமரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம் வழங்கப்படும்.
* ஐ.ஐ.டி.களில் இந்த ஆண்டு கூடுதலாக 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை.
மாநில அரசுடன் சேர்ந்து சுற்றுலா
* நாட்டில் உள்ள 50 முக்கிய சுற்றுலாத் தலங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்பட உள்ளது.
* குறிப்பிட்ட சுற்றுலா குழுவினருக்கு விசா விண்ணப்ப கட்டணத்தில் இருந்து முற்றிலும் விலக்கு.
* மருத்துவ சுற்றுலா திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
1.5 இலட்சம் அஞ்சல்நிலையங்கள்
* நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் உருவாக்கப்படும்.