அமர்நாத் இராமகிருட்டிணனைத் தமிழக அரசுப் பணிக்கு அழைக்கவேண்டும் என்று முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழடி – வைகை நதிக்கரையின் நாகரிகம் குறித்து முதன்முதலாக அகழாய்வினை மேற்கொண்டு சங்க காலம் எனக் குறிப்பிடப்படும் தமிழ் செவ்விலக்கியத்தின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதைத் தகுந்த சான்றாதாரங்களுடன் நிறுவிய அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்கள் 12ஆம் முறையாகத் தொடர்ந்து வேலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” எனக் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
”தமிழரின் தொன்மை குறித்த உண்மையைக் கண்டுபிடித்து உலகறியச் செய்த ஆய்வாளரை இவ்வாறு தொடர்ந்து அநீதியான முறையில் தண்டிப்பது பா.ச.க. அரசின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
சிந்துசமவெளி நாகரிகத்திற்கும், கீழடி நாகரிகத்திற்கும் இடைவெளி என்பது அநேகமாக இல்லை. இரண்டும் ஏறத்தாழ சமகாலத்தவை என்கிற உண்மை கீழடி அகழாய்வின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. இத்தகைய சிறந்ததொரு கண்டுபிடிப்பை நிறுவிய அமர்நாத் இராம கிருட்டிணனைப் பாராட்டுவதற்குப் பதில் அவரைத் தண்டிக்கும் வகையில் தொடர்ந்து இடமாறுதல் செய்வது நேர்மையற்றச் செயலாகும். எனவே, அவரை இந்திய அரசின் பணியிலிருந்து விடுவித்து, தமிழக அரசின் பணிக்கு அழைத்து, கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்தும் பொறுப்பினை அவரிடம் ஒப்படைக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆவன செய்யவேண்டும்.” என்றும் நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.