அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்கை டாஸ்மாக் நிர்வாகம் மட்டும் தொடர்ந்து நடத்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆயிரம் கோடி ஊழல் எனும் குற்றச்சாட்டு தொடர்பாக டாஸ்மாக் அலுவலகங்களில், அதிகாரிகள், அமைச்சர் தொடர்பான இடங்களில் அண்மையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது ஊழியர்களைச் செயல்படவிடாமல் தடுத்தது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன.
அதையடுத்து, அரசின் சார்பில் அமலாக்கத் துறை தொடர்ந்து இப்படி தேடுதல் சோதனை நடத்தத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக், தமிழக அரசு இரு தரப்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்திலும் இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் முறையிடப்பட்டது. வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது.
அதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் இன்றைய விசாரணையில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் முன்னிலையானார். அப்போது, நீதிபதிகள் அவரிடம் உச்சநீதிமன்றம் போவதென்றால் நாங்கள் இதை விசாரிக்க வேண்டியதே இல்லையே என கடிந்துகொண்டனர்.
இந்த வழக்கைத் தொடர்வது குறித்து அரசின் கருத்தைக் கேட்டுச் சொல்ல அவகாசம் வாங்கிக்கொண்டார். பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலையான வழக்குரைஞர், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மட்டும் வழக்கைத் தொடரவுள்ளதாகவும் அரசுத் தரப்பில் நிலை என்ன என்பதைப் பின்னர் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறினார்.
அதன்படி, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூத்த வழக்குரைஞர் விக்ரம் சௌத்ரி வாதிட்டார்.