அமெரிக்காவில் தங்கிப் படிக்கும் 35 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், பிரச்சினையை விவரித்துள்ளார்.
” இந்தியாவிலிருந்து மூன்று லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று, அங்குள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். படிப்பு நிறைவு பெறும்போது விருப்ப அடிப்படையில் மூன்றாண்டுகள்வரை அங்கு ஓபிடி திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதனைத் தடுத்து, படிப்பு முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்ற டொனால்ட் டிரம்ப் அரசு புதிய சட்டம் நிறைவேற்றுகிறது. இதனால் ஒரு லட்சம் இந்திய மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஓபிடி திட்டத்தில் மூன்றாண்டுகள் பணிபுரிந்தால், அங்கு ஏற்படும் பெரும் கல்விச் செலவில் ஒரளவு ஈடுகட்ட உதவுகிறது என்பதால் அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் ஓபிடி திட்டத்தை பெரிதும் சார்ந்து இருக்கிறார்கள். இத்திட்டத்திற்காக அமெரிக்க அரசு நான்கு பில்லியன் டாலர் செலவிட்டு வருகிறது.
இந்நிலையில் டொனால்டு டிரம்ப் அரசின் நவ தாராளமயக் கொள்கை மானிய ஒழிப்பை வலியுறுத்துவதால், இந்திய மாணவர்களின் ஓபிடி திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகிறது.
இலட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுவரும்போது, நாட்டின் பிரதமர், அயலுறவுத் துறை அமைச்சர் என ஒருவரும் வாய் திறக்காமல் இருப்பதைக் கண்டிக்கிறோம். அமெரிக்க அரசுடன் பேசி இந்திய மாணவர்கள் பயன்பெறும் ஓபிடி திட்டத்தை பாதுகாக்க வேண்டும்.” என்று முத்தரசன் கூறியுள்ளார்.