அமைச்சர் சிவசங்கரைக் கண்டித்து அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்
Published on

பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. ஆட்சியைக் கண்டித்தும்; மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைக்கும் விதமாக, அ.தி.மு.க.வின் மீது பொய்யான அவதூறு பரப்பி திசைதிருப்பும் வகையில் அநாகரிகமான, அருவருக்கத்தக்க அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் சிவசங்கரைக் கண்டித்தும் அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் நாளை சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாட்டின் தலைநகரில் மிகுந்த பாதுகாப்புக்குரியதாகக் கருதப்படும் உலகப் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே, பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சார்’ என்ற அந்த ஒரு நபர் யார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றபோது, அதற்கு முறையான பதில் அளிக்காமல் முதலமைச்சரும், அமைச்சர்களும் பதற்றமடைந்து, எதிர்க்கட்சிகளை வசைபாடுவதன்மூலம், இவர்கள் யாரோ ஒருவரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்களோ என்கிற ஐயம் எழுந்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில், திமுக அரசின் அமைச்சர் ஒருவர், அண்ணா தி.மு.க.வின் மீது அவதூறு செய்திகளைப் பரப்பி, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை திசைதிருப்பப் பார்க்கிறார்.” என்று கூறியுள்ளார்.

”இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தும்; பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஆட்சியைக் கண்டித்தும்; பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அண்ணா திமுக’ என அநாகரீகமான, அருவருக்கத்தக்க, அப்பட்டமான ஒரு பச்சைப் பொய்யை கூறியுள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரைக் கண்டித்தும், அண்ணா தி.மு.க. மகளிர் அணியின் சார்பில், நாளை (11ஆம் தேதி) சனிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ். கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெறும்.” என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com