தி.மு.க.வின்ஆட்சியை 2026இல் அகற்றுவோம் எனத.வெ.க. தலைவர் நடிகர் விஜய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் வேலூரில் இன்று செய்தியாளர்கள் கேட்டனர்.
செய்தியாளர் ஒருவர், மகளிர்க்குப் பாதுகாப்பில்லாத ஆட்சியைத் தேர்ந்தெடுத்டுவிட்டோம்; இதை 2026 தேர்தலில் மாற்றுவோம் எனப் பேசியிருக்கிறாரே; உங்கள் கருத்து என்ன எனக் கேட்டார்.
யாரு என பதிலுக்கு துரைமுருகன் எதிர்க்கேள்வி எழுப்பினார்.
விஜய் என செய்தியாளர்கள் கூட்டாகக் கூறியதும், அதுக்கெல்லாம் பதில்சொல்ல மாட்டேன் என அவர் மறுத்துவிட்டு, காரில் அமர்ந்துகொண்டார்.
அதன்பிறகும் கருத்து கேட்டபோது, அதைப் பற்றிப் பேசமுடியாது என துரைமுருகன் மறுத்துவிட்டார்.
மேகதாது அணை தயாராகிவருவதாக கர்நாடகத்தரப்பில் சொல்கிறார்களே எனக் கேட்டதற்கு, தமிழ்நாடு அரசு அதற்கு ஒப்புதல் அளிக்காது; ஒப்புதல் அளித்தால்தானே... அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் துரைமுருகன் கூறினார்.