அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதை வரவேற்றுள்ளநிலையில், பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக நடத்தப்பட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலூர் பகுதி மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன.இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன. அரிட்டாப்பட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டிருப்பது சரியான நடவடிக்கை.
அதேநேரத்தில் மேலூர் அரிட்டாப்பட்டி பகுதியை இனி வரும் காலங்களிலும் இத்தகைய திட்டங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக அந்தப் பகுதியை மேலூர் பல்லுயிர் புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.