ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு
ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு

ஆணையப் பணிக்கு ஊதியம் வேண்டாம்- அதிசய நீதிபதி!

இந்தக் காலத்தில் இப்படியொரு நீதிபதியா என்று ஆச்சரியப்பட வைக்கிறார், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு. எந்த ஆணையத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டாலும் ஊதியம் பெறாமல் பணிகளைச் செய்துமுடிக்கிறார், இவர்!

தற்போது இவர், ’பள்ளி - கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, மத வேறுபாடுகளால் ஏற்படும் வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள்’ குறித்து ஆய்வுசெய்து- அரசுக்கு ஆலோசனைகளை வழங்க ஒரு நபர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பணியானது ஆறு மாத காலம் நடைபெற உள்ள நிலையில், இதற்காக ஊதியம் எதுவும் வாங்காமல் பணி செய்ய ஒப்புக்கொண்டுள்ளார், சந்துரு.

இது குறித்து அவர் கூறுகையில், “குழந்தைகள் தொடர்பான எந்த விவகாரத்துக்கும் முன்னுரிமை கொடுப்பவன் நான். அதனாலேயே, இந்தப் பணியை ஒத்துக் கொண்டேன். இதற்காக எந்த ஊதியத்தையும் கவுரவத்தையும் பெறமாட்டேன் என்கிற நிபந்தனையுடன்தான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இதனால்தான் எனது ஊதியம் குறித்து அரசாணையில் தெரிவிக்கப்படவில்லை. என்னுடைய முடிவைக் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சற்று திகைத்துப்போனார்.” என்றார்.

மேலும், ”இதற்கு முன்னர்கூட ஊதியம் பெறாமல்தான் பல்வேறு குழுப் பணிகளைச் செய்துள்ளேன். ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்தபோது, நிர்வாகச் செலவுக்காகக்கூட எந்த ஊதியமும் பெறவில்லை. சிறார் இல்லங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டபோது வாகனச் செலவுடன் சேர்த்து ரூ. 2.5 லட்சம் ஊதியம் தருவதாக நிர்ணயித்திருந்தார்கள். அதை நான் பெறவில்லை. விமானத்தில் செல்வதற்கான வாய்ப்பு இருந்தாலும் ஆட்டோவிலும் இரயிலிலும்தான் சென்றுவருகிறேன்.” என்று கூறும் சந்துரு,

”நீதிபதிகள் ஓய்வுபெற்ற பிறகு ஊதியத்துக்கான பணிகளைப் பெறுவதற்காகவே, அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்ற எண்ணத்தை மாற்ற விரும்புகிறேன்.” என்கிறார்.

“ஏழு ஆண்டுகள் நீதிபதியாகப் பணிபுரிந்த எனக்கு வாழ்நாள் முழுவதும் அரசு ஓய்வூதியம் வழங்குகிறது. அப்படி இருக்க, ஓர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படும்போது எப்படி இன்னோர் ஊதியத்தைப் பெறுவது? ” என்று கேள்வி எழுப்புகிறார் சந்துரு.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com