சென்னைப் பல்கலைக் கழகத்தின் குற்றவியல் துறையின் சார்பில் நடைபெற்ற இந்திய குற்றவியல் சங்கத்தின் 6ஆவது சர்வதேச, 45ஆவது அகில இந்திய குற்றவியல் மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
சென்னைப் பல்கலைக்கழக செனட் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பேசுகையில், ஆண்மை என ஓரிடத்தில் குறிப்பிட்டார்.
பின்னர் பேசவந்த உதயநிதி, “ செழியன் அண்ணன் உரையாற்றும்போது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும், மாநில உரிமைக்கு என்ன தீங்கு வந்தாலும், எந்த ஒரு இடர்பாடு வந்தாலும், முதலில் குரல் கொடுக்கின்ற ஒரு மாநிலம் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். அப்படி குறிப்பிடும்போது ஒரு வார்த்தையை குறிப்பிட்டார். ஒரு ஆண்மையுள்ள மாநிலம் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் எனக்கு ஒரு சிறிய திருத்தம். இங்கே ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கின்றார்கள். எனவே, ஆண்மை என்றால் தனியாக ஒரு வீரம் என்று கிடையாது. அவர் குறிப்பிடும்போது இன்னொரு வார்த்தையும் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் அதிகமான பெண் போலீஸார் உள்ள இடமும் தமிழ்நாடு தான் என்று குறிப்பிட்டார். இங்கே நான் அவரிடத்தில் மற்றும் உங்களிடத்தில் தெரிவித்துக் கொள்வது, இங்கே ஆணுக்குப் பெண் நிச்சயம் எல்லோரும் சரிசமம்.”என்று சுட்டிக்காட்டி விளக்கம் அளித்தார்.
“ இந்திய குற்றவியல் சொசைட்டி மூலம் 1970 நவம்பர் 18இல் இப்படியான மாநாட்டை மறைந்த முதலமைச்சர் கருணாநிதிதான் தொடங்கிவைத்தார் என்பது சிறப்பு.” என்றார் அவர்.
”குழந்தைகள், பெண்கள் மீதான குற்றங்கள் உலக அளவில் அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்த மாநாடு நல்லபடியான ஆலோசனைகளை மேற்கொள்ளும். இந்தக் குற்றங்கள் ஒரு மதம், பண்பாடு, பகுதி, சமூகப்பொருளாதாரக் குழுவுடன் நின்றுவிடுவதில்லை. உலக அளவில் இதற்கெதிராக ஒன்றுபட்ட முயற்சி தேவைப்படுகிறது.
கிடைக்கக்கூடிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியாகவும் நெஞ்சை உலுக்கும்படியாகவும் உள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவின்படி, இந்தியாவில் மட்டும் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்தபடியே இருக்கின்றன. 2020ஆம் ஆண்டில் 3.71 இலட்சமாக இருந்த இந்த வழக்குகளின் எண்ணிக்கை, அடுத்த ஆண்டில் 4.28 இலட்சமாகக் கூடியுள்ளது. 2022ஆம் ஆண்டில் 4.45 இலட்சமாக மேலும் அதிகரித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்னும் விவரம் வெளியிடப்படாத நிலையில், இந்தப் போக்கு மிகவும் கவலைக்குரியதாகும். ஆனாலும் மற்ற பல வட மாநிலங்களை ஒப்பிட தமிழகத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன. அரசின் நல்லபடியான திட்டங்களின் விளைவை இதில் பார்க்கமுடிகிறது.” என்று உதயநிதி பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழு உறுப்பினர் முனைவர் சூ.ஆம்ஸ்ட்ராங், சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ச.ஏழுமலை, முன்னாள் டிஜிபி முனைவர் பி.எம். நாயர் உட்பட பலரும் பேசினர்.