ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளருக்கு வைகோ கண்டனம்!

வைகோ
வைகோ
Published on

அரசியல் சட்டத்தை தகர்க்க ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் முயல்வதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50 ஆம் ஆண்டை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, “அவசரநிலையின் போது இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இரண்டு வார்த்தைகள் - அதாவது மதச்சார்பின்மை, சோசலிசம் - ஆகியவை சேர்க்கப்பட்டன. இந்த இரண்டு வார்த்தைகளும் முன்னர் முகவுரையில் இல்லை.

மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை முதலில் இந்திய அரசியலமைப்பில் இல்லை. மதச்சார்பின்மை பற்றிய கருத்துக்கள் இருந்திருக்கலாம், அவை ஆட்சி, அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் - ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் முகவுரையில் இருக்க வேண்டுமா?  அவை நீக்கப்பட வேண்டும” என்று கூறி இருக்கிறார்.” என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள வைகோ அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

”இந்திய அரசியலமைப்பில், 1976-ஆம் ஆண்டு, 42-வது திருத்தச் சட்டத்தின் பிரிவு 2-இன் கீழ் ‘சோசலிச, மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகள் சேர்க்கப் பட்டிருந்தது. இதற்கு எதிராக  சுப்பிர மணியன் சுவாமி, வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய, பல்ராம் சிங் ஆகியோர் உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து 2024, நவம்பர் -25 ஆம் தேதி தீர்ப்பை வழங்கியது.

அதில், 42-ஆவது திருத்தம் மூலம், அரசியலமைப்பு சட்ட முகப்புரையில், ‘சோசலிச, மதச்சார்பற்ற’ என்ற சொற்களை இணைத்தது செல்லும் என்று கூறி, சுப்பிரமணியசாமி உள்ளிட்டோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “முகப்புரை என்பது, அரசிய லமைப்பிற்கு அந்நியமானது அல்ல, அதன் ஒருங்கிணைந்த பகுதி தான். எனவே, 368-வது பிரிவின் கீழ் அரசியலமைப்பை திருத்துவதற்கு உள்ள அதி காரம், அரசியலமைப்பின் முகப்புரைக்கும் பொருந்தும். ‘சோசலிசம்’ என்ற வார்த்தை யைப் பொறுத்தவரை, அது அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் ‘பொது நல அரசு’ என்பதையே குறிக்கிறது. முகப்புரையில் இணைக்கப்பட்ட சோசலிசம் என்ற வார்த்தை, தேசத்தின் வளர்ச்சிக்காக எந்த ஒரு பொருளாதாரக் கோட்பாட்டையும் பின்பற்று வதைத் தடுக்கவில்லை.

இந்தியாவில் சோசலிசம் என்ற கருத்து தனியார் நிறுவனங்களின் பங்களிப்பையோ அல்லது தனித்துவத்தை நிராகரிக்கவோ இல்லை. அதேபோல மதச்சார்பின்மை எப்போதும், நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பகுதி III-இன் கீழ் உள்ள உரிமைகளை ஒருவர் உற்றுநோக்கினால், அவற்றில் மதச்சார்பற்ற நிலை முக்கிய அம்சமாக இருப்பதை தெளிவாக காண முடியும். எனவே, சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை இரண்டும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் அங்கமாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் அரசியல் சாசனத்தை மாற்றி எழுத வேண்டும் என்று நீண்ட காலமாகவே கூப்பாடு போட்டு வருகின்றன.

நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒரே நாடு ,ஒரே மொழி ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள ஆர் எஸ் எஸ் அமைப்பு, பாஜக அரசு மூலம் அதனை செயல்படுத்திட மூர்க்கத்தனமாக இறங்கி உள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளான இறையாண்மை, சோசலிசம், சமயச் சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு முறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவை அனைத்தையும் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசின் கடந்த 10 ஆண்டு கால செயல்பாடுகள் இருக்கின்றன.

எனவே, அரசியல் சட்டத்தையே தகர்க்க முனைந்திடும் இந்துத்துவ சனாதனச் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் உறுதி ஏற்க வேண்டும்.” என்றும் வைகோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com