குடியரசு நாளன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார். ஆகவே, ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப் போலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “வருகிற 26.01.2025 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் தரும் தேநீர் விருந்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்காது. அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு ஒதுக்கீடு செய்துள்ள கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற மறுத்து வருவது. சட்டமன்றப் பேரவை வழிவழியாக கடைப்பிடித்து வரும் மரபுகளை உடைத்து, சிதைக்க முயற்சிப்பது, சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடுவது, உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகளையும் மதிக்க தவறுவது, பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் செய்வதில் மாநில உரிமையை மறுத்து, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான சிந்தனைகளை திணித்து வருவது, உலகப் பொதுமறை தந்த வள்ளுவர், சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை நீக்கி, மனிதாபிமானம் வளர்த்த வள்ளலார் சிந்தனைகளை திருத்திக் கூறுவது, வழக்கொழிந்து வரும் மூடப்பழக்க, வழங்கங்களுக்கு உயிரூட்டும் செயலில் ஈடுபடுவது, மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தும் அதிகார அத்துமீறலில் ஈடுபடுவது என தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, புறக்கணித்து, தனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.