2 பேர் தீவைத்து எரிப்பு - பா.ம.க., வி.சி.க. மாறிமாறி புகார்!

Ramadass- Thirumavalavan
இராமதாஸ் - திருமாவளவன்
Published on

இராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூர் அருகில் உள்ள நெல்வாய் கிராமத்தில் நேற்றுமுன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டதில் 2 பேர் தீவைத்து எரிக்கப்பட்டனர்.

குலைநடுங்க வைக்கும் இந்த சம்பவத்தை முன்வைத்து, பா.ம.க.வும் வி.சி.க.வும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியுள்ளன.

நேற்று மாலையில் பா.ம.க. நிறுவனர் இராமதாசு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். வி.சி.க. தலைமை தரப்பில் அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், அரக்கோணம் வி.சி.க. மாவட்ட அமைப்பின் முன்னாள் மாவட்டச்செயலாளர் கௌதமன் பெயரில் வெளியான அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வி.சி.க. முன்னாள் மா.செ. அறிக்கை:

”இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் 16. 1 .2025 அன்று நெல்வாய் கிராமத்தை சேர்ந்த தமிழரசன், சங்கர், விஜயகணபதி ஆகியோர் நெல்வாய் கிராமத்தையொட்டி சாலையோரமாக நின்று பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர் (இவர்களில் ஒருவர் யாதவ வகுப்பைச்சேர்ந்தவர். மற்றவர் வன்னியர் வகுப்பை சேர்ந்தவர்)

அந்தவழியாக. திருமால்பூர் கிராமத்தை சேர்ந்த பிரேம்,மணிகண்டன் ஆகியோர் (இவர்கள் எந்த கட்சியும் சாராதவர்கள்) இரண்டு சக்கர வாகனத்தில் போகும்போது மேற்படி நெல்வாய் கிராமத்தை சேர்ந்த சங்கர், தமிழரசன் ஆகிய இருவரும், இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து அதட்டி குரல் கொடுத்திருக்கிறார்கள். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற பிரேம் மற்றும் அவருடைய நண்பர் மணிகண்டன் ஆகியோர் வாகனத்தை நிறுத்தி, நேற்றும் இதே போல் தான் நாங்கள் போகும்போதுஅதட்டிக் குரல் கொடுத்தீர்கள்; இப்போதும் அப்படியே குரல் கொடுக்கிறீர்களே ஏன் ? என்று கேட்டுள்ளனர். இதனால் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது

அப்போது அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு வந்த வேறு ஒரு நபர் வண்டியை நிறுத்திவிட்டு ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று சமாதானம் செய்துள்ளார். ஆனாலும் தகராறு அதிகப்படியாக முற்றியதன் விளைவாக, சமாதானம் செய்தவர் கையில் இருந்த பெட்ரோலை பிடுங்கி வம்பிழுத்த நபர்கள் மீது எதிர்த் தரப்பினர் ஊற்றியுள்ளனர். இப்படி நடந்ததாக தான் காவல் துறையின் தரப்பிலும் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர்கள் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்களிடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர்கள் தான் பெட்ரோலை ஊற்றி எரித்தார்கள் என்று ஒரு அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லியிருக்கிறார்.

அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் திட்டமிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர்கள் தான் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதான நன்மதிப்பை கெடுக்கின்ற வகையிலும் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற முயற்சியிலும் இவர்கள் இருவரும் இறங்கியுள்ளனர்.

பிரச்சினையில் தொடர்புடையவர்கள் வன்னிய சமூகத்தையும் பட்டியலின சமூகத்தையும் சார்ந்தவர்கள். காயமடைந்தவர்களில் ஒருவர் யாதவ வகுப்பைச் சார்ந்தவர்.

இவர்களில் யாரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர்கள் இல்லை .

இது எதிர்பாராமல் நடந்த அசம்பாவிதம் என்று காவல்துறையும் அங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் பேசுகின்றார்கள்.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி அவர்களும் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் திட்டமிட்டு விடுதலைச் சிறுத்தைகள் மீது இந்த பழியை சுமத்தி சாதியின் பெயரால் வன்முறையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

இதில் முன் விரோதம் இல்லை என்றும் சாதி அடிப்படையில் நடந்த தகராறு இல்லை என்றும் எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் என்றும் காவல்துறை தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

ஆனால் பொய்யான வதந்தியைப் பரப்பி விடுதலைச் சிறுத்தைகள் மீது பழிபோடுவது நியாயமா?

பாலிமர் ஊடகம் தவிர மற்ற எந்த ஊடகமும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்ந்தவர்கள் தான் என்று பதிவிடவில்லை. எனவே தமிழக மக்கள், குறிப்பாக வன்னிய சமூகத்தினர் தயவு கூர்ந்து இந்தப் பொய்யான செய்தியை நம்ப வேண்டாம்.”

பா.ம.க. நிறுவனர் இராமதாசு அறிக்கை:  

” சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கான வளங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக இருந்தாலும், அந்த வகை மின்சாரங்களின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தியில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த தமிழ்நாடு இப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மரபுசாராத மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் போதிய கொள்கைகளும், வழிகாட்டுதல்களும் இல்லாதது தான் இதற்கு காரணம் ஆகும். இது தமிழக அரசின் படுதோல்வி ஆகும்.

2024-ஆம் ஆண்டு திசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்னுற்பத்தில்  32,246 மெகாவாட் நிறுவு திறனுடன் இராஜஸ்தான் மாநிலம் முதலிடத்திலும், 31,482 மெகாவாட் நிறுவு திறனுடன் குஜராத் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இவற்றுடன் போட்டியிட முடியாத அளவுக்கு  மிகவும் பின் தங்கி 24,274  மெகாவாட் நிறுவுதிறனுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் தான் உள்ளது.

காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்னுற்பத்தியில் 2017&ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருந்தது. காற்றாலை மின்னுற்பத்தியைப் பொறுத்தவரை 2023 ஜனவரி 31&ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு 9964 மெகாவாட் நிறுவு திறனுடன் முதலிடத்திலும், 9918 மெகாவாட் நிறுவுதிறனுடன் குஜராத் இரண்டாவது இடத்திலும் இருந்தன. ஆனால், அதே ஆண்டின் ஆகஸ்ட் மாத நிலவரப்படி குஜராத் மாநிலம் 11,063 மெகாவாட் நிறுவுதிறனுடன் முதலிடத்தை பிடித்தது. தமிழ்நாடு 10,248 மெகாவாட் நிறுவுதிறனுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இப்போதும் அதே நிலை நீடிப்பது மட்டுமின்றி, இரு மாநிலங்களுக்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்திருக்கிறது. கடந்த திசம்பர் 31&ஆம் தேதி நிலவரப்படி குஜராத் 12,473 மெகாவாட்டுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 11,409 மெகாவாட்டுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

அதேபோல், சூரிய ஒளி மின்சார உற்பத்தியில், தமிழ்நாடு வெறும் 9518 மெகாவாட் நிறுவு திறனுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இராஜஸ்தான் 26,489 மெகாவாட் திறனுடன் முதலிடத்திலும், குஜராத் 16,795 மெகாவாட் திறனுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. முதல் இரு இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்களுக்கு இடையிலான சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவுதிறன்களின் வித்தியாசத்தை விட(9694) தமிழகத்தின் நிறுவுதிறன் குறைவு ஆகும். காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லாததையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன.

பத்தாண்டுகளுக்கு முன் 2023&ஆம் நிலவரப்படி காற்றாலை மின்னுற்பத்தித் திறன் தமிழ்நாட்டில் 7245 மெகாவாட்டாகவும், குஜராத்தில் 3313 மெகாவாட்டாகவும் இருந்தன. அப்போது குஜராத் மூன்றாவது இடத்தில் இருந்தது. தமிழ்நாட்டின் காற்றாலை மின்னுற்பத்தி குஜராத்தின் மின்னுற்பத்தியை விட இரு மடங்குக்கும்  அதிகம். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் அனைத்துப் பெருமைகளையும் இழந்து நிற்கிறது தமிழ்நாடு.

சூரிய ஒளி மின்னுற்பத்தியைப் பொருத்தவரை, ராஜஸ்தானுக்கு இணையாக தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் சூரிய ஒளி ஆதாரம் அளவுக்கு அதிகமாக உள்ளது. ஆனால், அதைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு முறையான கொள்கைகளை வகுக்கவில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 50 மெகாவாட் திறன்கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்று வரை ஒரு மாவட்டத்தில் கூட சூரிய ஒளி பூங்கா அமைக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளைக் கூட திமுக அரசு மேற்கொள்ளவில்லை.

 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக, தமிழகத்தில் 6000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்திட்டங்கள் அடுத்த இரு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்; அவற்றில் 2000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டங்களை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல் படுத்தும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட்டிருந்தால், சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திற்கு கூட முன்னேறியிருக்க முடியும். ஆனால், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் முதல் அடியைக் கூட திமுக அரசு இதுவரை எடுத்து வைக்கவில்லை.

காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான வளங்கள் தமிழகத்தில் ஏராளமாக இருந்தாலும் கூட அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற கொள்கைகள் இது வரை வகுக்கப் படவில்லை. அதேபோல், மரபுசாரா எரிசக்தி தான் உலகின் எதிர்காலம் என்று தீர்மானிக்கப்பட்டு விட்ட நிலையில், அதை வளர்த்தெடுக்க தனி அமைச்சகம் தேவை. மத்தியில் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே அத்தகைய அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்திலோ, இன்று வரை  மரபுசாரா எரிசக்தித்  துறை தொடங்கப்படவில்லை. இத்தகைய  போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அவற்றுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படுவதுடன், தனித்தனி கொள்கைகளும் வகுக்கப்பட வேண்டும்.”

logo
Andhimazhai
www.andhimazhai.com