ஈழத்தமிழ் அகதிகள் நெஞ்சில் வேல்பாய்ச்சிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு - நெடுமாறன் வேதனை!

Nedumaran
பழ. நெடுமாறன்
Published on

ஈழத் தமிழ் அகதிகளுக்கெதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருப்பதாகவும் அது தமிழர்கள் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது என்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

அவர் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்மசத்திரம் அல்ல” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது கண்டு அளவற்ற வேதனை அடைகிறேன். புத்தரும், மகாவீரரும், காந்தியடிகளும் பிறந்த மண்ணில் இப்படியொரு தீர்ப்பா?

ஈழத் தமிழரான சுபாஷ்கரன் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இராமநாதபுரம் நீதிமன்றம் குற்றவாளி எனக் கருதி இவருக்கு 10ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றம் 2022ஆம் ஆண்டில் இவர் தண்டனையை 7ஆண்டு காலமாக குறைத்தது. இதன்படி இவரது தண்டனைக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவேறுகிறது. தண்டனை காலம் முடிவடைந்தவுடன் இந்தியாவிலேயே தங்க அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தபோது, அவர் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் “அனைத்து நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்க இந்தியா தர்மசத்திரம் அல்ல” எனக் கூறியுள்ளது தமிழர்களின் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது.

செஞ்சீனம் திபெத்தை ஆக்கிரமித்தபோது, அங்கிருந்து தப்பி தலாய்லாமா தனது மக்களுடன் நடந்தே இந்தியாவின் எல்லைக்கு வந்தபோது, அப்போதைய தலைமையமைச்சர் நேரு அவர்கள் இந்திய எல்லைக்கே சென்று அவரையும், பல்லாயிரக்கணக்கான திபெத்தியரையும் வரவேற்று இந்தியாவில் அடைக்கலம் கொடுத்தார். அவர்கள் கடந்த 63 ஆண்டுகளாக தலாய்லாமாவும், திபெத்திய அகதிகளும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ளனர். தலாய்லாமாவுக்கு அரசாங்கத் தலைவர் தகுதி வழங்கப்பட்டுள்ளது. திபெத்தியர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வணிகம் நடத்தவும், தொழில் நடத்தவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து அவர்களுக்கு நிதியுதவியை பல நாடுகள் தலாய்லாமா மூலம் அனுப்பி உதவி செய்கின்றன. 63 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் தங்கியிருக்கும் தலாய்லாமாவையும், அவருடன் வந்த திபெத்திய மக்களையும் நோக்கி “இந்தியா என்ன தர்மசத்திரமா?” என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் கேட்குமா?

தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் அகதிகளாக 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக வாழ்ந்துவருகிறார்கள். அவர்களில் சுபாஷ்கரனின் குடும்பமும் ஒன்று. ஏற்கெனவே 1992ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த ஈழத் தமிழ் அகதிகள் சிலருக்கு இந்தியாவிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய அரசாங்கம் உத்தரவிட்ட போது, நானும், பா.ம.க. தலைவர் இராமதாசும் இணைந்து இதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டோம். எங்களின் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் “இலங்கைத் தமிழ் அகதிகளை அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே திருப்பி அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உண்டு” என்பது ஏற்கத் தக்கதல்ல. தாமாக திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது” என 27.08.1992ஆம் நாளில் ஆணை பிறப்பித்தது. இதுவரை இந்த ஆணை பின்பற்றப்படுகிறது. இதன்விளைவாக இந்தியாவை நம்பி அடைக்கலம் புகுந்த ஈழத் தமிழ் அகதிகள் இன்னமும் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தற்போதை தீர்ப்பின் விளைவாக அவர்களும் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படலாம்.

எனவே, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இதைத் தடுத்து நிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்ய முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன்.” என்று நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com