உச்சநீதிமன்றத்தை மதிச்சா 10% ஒதுக்கீட்டைக் கொண்டுவாங்க ஸ்டாலின்!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
Published on

உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், அரசியலமைப்பு சட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின்  மதிப்பதாக இருந்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய நிர்வாகிகளில் ஒருவருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “ உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு குறித்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவருக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசுக்கும், டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே, குடியரசு துணைத் தலைவரின் கருத்து அமைந்திருந்தது. இதனால் நிலைகுலைந்துபோன முதலமைச்சர் ஸ்டாலின், 'யாரும் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது. ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளால் அரசுகள் நடத்தப்பட வேண்டும்' என கூறியிருக்கிறார். இதைத்தான் குடியரசு துணைத் தலைவரும் கூறியிருக்கிறார்.” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

“ ஸ்டாலின் தனது கருத்தை திரும்ப படித்துப் பார்க்க வேண்டும். "யாரும் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க கூடாது" என்பதுதான் பாஜகவின் கருத்தும். முதலமைச்சர் ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தையும், டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பையும், உண்மையிலேயே மதிப்பவராக இருந்தால், அரசியல் சட்டத்தில் உள்ள, உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும். தங்களுக்கு உடன்பாடாக இல்லையெனில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், அரசியல் சட்டத்தையும் துச்சமென மதிப்பவர்கள், இப்போது அரசியல் சட்டத்தை மதிப்பது போல நடிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.” என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com