உண்மையிலேயே நிர்மலா சீதாராமனுக்கு வருத்தமா?- விஜய் கேள்வி

த.வெ.க. விஜய்
த.வெ.க. விஜய்
Published on

பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே என்று த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.  

அவர் இன்று மாலையில் தன் சமூக ஊடகப் பக்கங்களில் இக்கேள்வியை முன்வைத்துள்ளார்.   

”முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன!?

குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?!

பெரியார் போற்றுதும்! பெரியார் சிந்தனை போற்றுதும்!” என்று விஜய்யின் அறிக்கையில் கூறியுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com