உலக அளவிலான நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் செய்யப்படுகிறது.
இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா, இதைத் தெரிவித்தார்.
இந்திய உதவியுடன் 300 கோடி ரூபாய் இலங்கைப் பணத்துக்கு டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அண்மையில் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்கா தில்லிக்கு வந்திருந்தபோது இதுகுறித்து உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது.
அதைச் சுட்டிக்காட்டிய சந்தோஷ் ஜா, இந்தியா இதுவரை 130 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கியுள்ளதாகவும் இந்தியாவில் 120 கோடி பேரிடம் நவீன கையடக்கத் தொலைபேசி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவைவிட எட்டு மடங்கு தொலைவுக்கு ஆப்டிக்கல் பைபர் எனப்படும் இணையவசதிக் கம்பித்தொடர்பை அமைத்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.