நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து தலைமைச்செயலகத்தில் இன்று காலையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் திருமாவளவனும் பொதுச்செயலாளர் இரவிக்குமாரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் திருமா பேசியது:
” மக்கள் தொகை அடிப்படையிலே நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்கிற முன்னெச்சரிக்கை உணர்வை மேற்கொண்டு இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டிய பொறுப்புணர்வோடு இந்த கூட்டம் நடைபெறுவது நம்பிக்கையை அளிக்கிறது.
50 மாநிலங்கள் கொண்ட ஒரு தேசம் அமெரிக்கா நூறாண்டுகளாக ஒரே எண்ணிக்கையை தான் அவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் இதே பிரதிநிதித்துவ சனநாயகம் தான் நடைமுறையில் இருக்கிறது.
எனவே, நமது முதல் நிலைப்பாடு எண்ணிக்கையை மாற்ற வேண்டாம். இதே எண்ணிக்கையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணிக்கை சமநிலை மாறக்கூடாது. 39 இடங்கள் நமக்கு இருக்கின்றன எண்ணிக்கையை மாற்ற வேண்டாம் என்பதில் நாம் உறுதியாக இருப்போம். அதையே தொடர்ந்து வலியுறுத்துவோம்.
எண்ணிக்கையை உயர்த்துவதென்றால் தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள மக்களவைத் தொகுதிகளின் விகிதம் மாறாமல் உயர்த்த வேண்டும்.
கடந்த முறை மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் எல்லைகளை மறுவரை செய்தபோது சிறுபான்மையினர் அதாவது இசுலாமியர்கள் கிறித்தவர்கள் வாக்குகள், பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. அதுபோல் இல்லாமல் அவர்களது வாக்குகளுக்கு மதிப்பிருக்கும் விதத்தில் எல்லை மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாநில அரசே தீர்மானிக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்ற வேண்டாம், தற்போது நடைமுறையில் உள்ளது போலவே தொடர வேண்டும்.
தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்திருக்கிறார். அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கை குழு அது முதற்கட்டமாக தேவையானதாக கருதுகிறேன். அந்த கூட்டு நடவடிக்கைக் குழுவையும் விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது ஆதரிக்கிறது.” என்று திருமாவளவன் பேசினார்.