இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் கடைசிநாள்வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இன்று பொது நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை வேளாண் நிதிநிலை அறிக்கை அவையில் முன்வைக்கப்படும்.
ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் வரும் திங்களன்று கூடும் சட்டப்பேரவையில், இரண்டு நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான பொது விவாதம் தொடங்கும்.
21ஆம் தேதி அமைச்சர்கள் இருவரும் பொது விவாதத்துக்குப் பதில் அளிப்பார்கள்.
24ஆம் தேதி முதல் ஒவ்வொரு துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறத் தொடங்கும்.
நீர்வளத் துறை மீதான விவாதம் முதலாக நடைபெறுகிறது.
நிறைவாக,ஏப்ரல் 30ஆம்தேதி அன்று காவல், தீயணைப்புத் துறைகளின் மீதான விவாதமும் முதலமைச்சரின் பதிலுரையும் இடம்பெறும்.