ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியை நீக்கவேண்டும்- பெ.சண்முகம்

சிபிஐஎம் பெ.சண்முகம்- ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி
சிபிஐஎம் பெ.சண்முகம்- ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி
Published on

சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கவேண்டும் என்று மத்திய கல்வித் துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் இன்று வெளியிட்ட அறிக்கை: 

” மிக உயர்ந்த தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குநரான காமகோடி கோமியம் குறித்து பெருமை பொங்கப் பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும். இது ஐ.ஐ.டி. போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மீதும், அறிவியல் கண்ணோட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழக்கச் செய்யவும், மூடநம்பிக்கையை வளர்க்கவும் உதவும். ஐ.ஐ.டி. இயக்குநரா, ஆர். எஸ்.எஸ். பிரச்சாரகரா என வேறுபாடு தெரியாத அளவிற்கு சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடியின் சொல்லும் செயலும் வெளிப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, காசி தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் பா.ஜ.க. அரசியலுக்கான செயல்பாட்டுக் களமாக நிறுவனத்தை அனுமதித்தார். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இந்து மதம் அல்லாத பிற மத அடையாளம் கொண்டோர், சமூக நீதி காரணமாக இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்தோர் பாரபட்சமாக நடத்தப்பட்டனர் என்பது வெளிச்சத்திற்கு வந்த உண்மை. இயக்குநரின் வெளிப்படையான ஆர். எஸ். எஸ். ஆதரவு பிரச்சாரம் மேற்படி பாரபட்சத்தை அதிகரிக்கும்.

பிரதமர் மோடி அறிவியல் மாநாட்டைத் தொடங்கிவைக்கும் உரையில் விநாயகர் உருவம்தான் முதல் குளோனிங் எனப் பேசினார். இது வலுவாக எதிர்க்கப்பட்டது. அவர் தற்போது கோசாலை விழாவில் உடல் உபாதைகள், காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு கோமியம் அற்புதமான மருந்து என உரையாற்றி இருப்பது, கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல. கோமியம் உடல் நலத்திற்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உடனடியாக இயக்குநர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட வேண்டும். மேலும் இவருக்கு வழங்கிய முனைவர் பட்டம் உட்பட்ட பட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டியவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

மேலும், பா.ஜ.க. ஆட்சி, ஆய்வு நிறுவனங்களை, மற்ற தன்னாட்சி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். மையங்களாக மாற்றிவருகிறது என்கிற குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் அந்தஸ்தத்தைப் பயன்படுத்தி காமகோடி ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரத்தைச் செய்வது, தமிழ்நாட்டின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தானது. எனவே சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பொறுப்பிலிருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்தவேண்டும்.” என்று பெ.சண்முகம் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com