‘கசப்பான செய்தியை நான் சொல்வதில்லை…!’ - ராமதாஸ் சூசகம்!

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்
Published on

“எனக்கும் அன்புமணி ராமதாசுக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை. வரும் நாட்களில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார்.” என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ராமதாஸ் தலைமையில் கடந்த 15, 16ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 மாவட்டச் செயலாளர்கள், 11 மாவட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 82 மாவட்ட செயலாளர்கள், 80 மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் கட்சிக்குள் அப்பா, மகன் இருவரிடையே கோஷ்டி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் கட்சியினாிடையே தொடர்ந்து பரபரப்பும், குழப்பமும் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:

“எனக்கும் அன்புமணி ராமதாசுக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை. வரும் நாட்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார். கசப்பான செய்தியை என்றும் நான் சொல்வதில்லை, இனிப்பான செய்தியை தான் சொல்வேன். பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கபோவதாக வதந்திகளை கிளப்பி விடுகின்றனர், அவர்கள் யார் என எனக்கு தெரியும். பாமக நான் உருவாக்கிய கட்சி. அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா?.

இந்திய அளவில் சமூக நீதியை பேசுவது நான் ஒருவன்தான். நான் மட்டும்தான் அதை பேச முடியும். என்னை விட்டால் வேறு யாரும் பேச முடியாது. மற்றவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. சிங்கத்தின் கால்கள் பழுது படவில்லை; சிற்றமும் குறையவில்லை என நிரூபிக்கவே நேற்று நீச்சல் அடித்தேன். ” இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com