கட்டாயக் கடன் வசூல் சட்டம்- விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறுமா?

கட்டாயக் கடன் வசூல் சட்டம்- விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறுமா?
Published on

கட்டாயக் கடன் வசூல் தடை தனிச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வரவேற்றுள்ளது.

அதன் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம் எல் ஏ, மாநிலப் பொதுச் செயலாளர்  வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: 

”தமிழ்நாடு முழுவதும் விவசாயத் தொழிலாளர்கள், சிறு குறு  விவசாயிகள், விளிம்பு நிலை மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தனியார் நுன்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் நடத்தும் நிதிநிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் தவணைத் தொகையை செலுத்த தவறுவதால் நிதிநிறுவன ஊழியர்களின் பழிச் சொல், மிரட்டல், அநாகரிகமாக நடந்து கொள்வது போன்ற கொடூர நடவடிக்கை காரணமாக ஏராளமானோர் கடந்த காலங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இத்தகைய தாக்குதலில் பெரும்பாலும் கிராமப்புற ஏழை பெண்கள் பாதிக்கப்பட்டு சுயமரியாதை இழந்து சாவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கொடுமைகளிலிருந்து ஏழை எளிய மக்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தியும் பெண் விவசாயத் தொழிலாளர்களை அணிதிரட்டி போராட்டங்களும் நடத்தி வந்துள்ளது.

இந்நிலையில் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் கட்டாய வசூல் செய்வோர், கன்னியக்குறைவாக நடந்து கொள்வோர் மீது கடும் தண்டனைக்கு உள்ளாக்கும் வகையில் 3 ஆண்டு காலம் வரை சிறை தண்டனை அளிக்கக் கூடிய வகையில் தனிச் சட்டம் இயற்றிய தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் வரவேற்கிறோம்.

தமிழ்நாட்டின் உழைப்பாளி மக்கள்படும் துன்ப, துயரத்தை ஆய்வு செய்து மேற்கண்ட சட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகள்  எடுத்த    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரிசர்வ் வங்கியில் பதிவு பெற்றும், நிதி உதவியுடன் இயங்கும் நிதி நிறுவனங்களிடமும் இத்தகைய நிறுவனங்களின் கட்டாய வசூல் மற்றும் கெட்ட நடத்தையில்  ஈடுபடும் ஊழியர்கள் மீதும் இந்த சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று கோருகிறோம்.

அவசர தேவைகளுக்காகவும், கல்வி, மருத்துவம் மற்றும் சிறு தொழில் செய்து பிழைப்பு நடத்தவும் கூட்டுறவு வங்கிகள், மைய அரசின் வணிக வங்கிகள் குறைந்த வட்டியில் விரைந்து நீண்ட கால தவணையில் கடன் வழங்கவும் போதுமான நடவடிக்கைகள்  எடுத்து உழைப்பாளி மக்களைப் பாதுகாக்க வேண்டும்.” என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com